×

763 கி.மீ. தூரம் கொண்ட கொசஸ்தலை ஆறு வடிநிலப் பகுதியில் ரூ.2,518 கோடியில் ஒருங்கிணைந்த வடிகால்

* விரைவில் பணி தொடங்கப்படும்  
* மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை: கொசஸ்தலை ஆறு வடிநிலப் பகுதியில் ரூ.2,518 கோடி செலவில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணியானது, ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மாநகராட்சியில் 1,894 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வடிகால்கள் அனைத்தும் மழைநீர் வடிகால் துறையால் பராமரிக்கப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால்கள் சேதமடைந்தன. இதைத்தொடர்ந்து 2016 மற்றும் 2017ம் ஆண்டு மழைக் காலங்களின்போது கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மழைநீர் வடிகால்கள் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளித்தனர். அதன்படி சென்னை பெருநகர வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.290 கோடி மதிப்பீட்டிலும், ஸ்மார்ட் சிட்டி நிதியில் இருந்து ரூ.150 கோடி மதிப்பீட்டிலும் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை தவிர்த்து அடையாறு, கூவம், கோவளம் ஆகிய வடிநிலப் பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அடையாறு மற்றும் கூவம் வடிநிலப்பகுதியில் 406 கி.மீ நீளத்திற்கு ரூ.1250 கோடி மதிப்பீட்டில் உலகி வங்கி நிதி உதவியுடன் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி முடிந்துவிட்டது. கோவளம் வடிநிலப்பகுதியில் ஜெர்மனி வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ.1,243 கோடி செலவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக 52 கி.மீ. துரத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் கொசஸ்தலை ஆறு வடிநிலப்பகுதியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்க முடிவு செய்யப்பட்டு, திட்ட அறிக்கையும் தயார் செய்யப்பட்டது. இதற்காக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகிய அமைப்புகளிடம் நிதி உதவி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் இரண்டு அமைப்புகளும் விண்ணப்பத்ைத நிராகரித்து விட்டன. இதனை தொடர்ந்து புதிதாக திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மீண்டும் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் நிதி உதவி கோரி விண்ணப்பிக்கப்பட்டது.

இதுதொடர்பாக டெல்லியில் நடந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) கோவிந்தராவ், மழைநீர் வடிகால் துறை கண்காணிப்பு பொறியாளர் நந்தக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் கொசஸ்தலை ஆறு வடிநிலப்பகுதியில் ரூ.2,518 கோடி செலவில் 763 கி.மீ. தூரத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய பொருளாதார அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. நிதி ஆயோக் அனுமதி வழங்கியவுடன் இதற்கான நிதி விடுவிக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்படும், என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மழைநீர் வடிகால்  அமைக்கும் திட்டத்திற்கு மத்திய பொருளாதார அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. நிதி ஆயோக் அனுமதி வழங்கியவுடன் நிதி  விடுவிக்கப்பட்டு வடிகால் பணிகள் தொடங்கும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிதி ஒதுக்கீடு விவரம்
* சென்னை பெருநகர வளர்ச்சி நிதி - ரூ.290 கோடி
* ஸ்மார்ட் சிட்டி நிதி - ரூ.150 கோடி
* ஜெர்மனி வளர்ச்சி வங்கி நிதி - ரூ.1243 கோடி
* ஆசிய வளர்ச்சி வங்கி நிதி - ரூ.2500 கோடி
* உலக வங்கி நிதி - ரூ.1250 கோடி


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : river basin ,Kosstaalai , Kosastalai River,drainage,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு