×

ரூ.34 லட்சத்தில் கட்டப்பட்டது பராமரிப்பின்றி பாழாகும் நகராட்சி பூங்கா: அதிகாரிகள் அலட்சியம்

தாம்பரம்: தாம்பரம் நகராட்சியில் ரூ.34 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட பூங்காவை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால் பாழாகி வருகிறது. தாம்பரம் நகராட்சி 38வது வார்டுக்கு உட்பட்ட அம்பாள் நகரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கிணற்றின் அருகே உள்ள காலி இடத்தில், பூங்கா அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, அமுரிட் திட்டத்தின் கீழ், ரூ.34 லட்சம் செலவில் கடந்த சிலமாதங்களுக்கு முன், பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கியது. இதில், சிறுவர்களுக்கான விளையாட்டு சாதனங்கள், நடைபாதை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. கடந்த 2 மாதங்களுக்கு முன் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டது. ஆனால், மக்கள் பயன்பாட்டிற்கு திறக்காமல் பூட்டியே கிடந்தது. இதால், பொதுமக்களே அந்த பூங்காவை திறந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பூங்காவை பொதுமக்களே திறந்துவிட்டதால் நகராட்சி அதிகாரிகள் பராமரிப்பு பணி மேற்கொள்வதில்லை. இதனால், பூங்கா வளாகம் புதர்மண்டி காட்சியளிக்கின்றது. இதில், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் இந்த பூங்காவை பயன்படுத்த தயக்கம் காட்டி வருகின்றனர்.

பெற்றோரும் தங்களது குழந்தைகளை இந்த பூங்காவிற்கு விளையாட அனுப்ப அச்சப்படுகின்றனர். இதனால், விளையாட்டு உபகரணங்களும் பயன்பாடின்றி பாழாகி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பூங்கா அமைக்க இந்த பகுதியில் விசாலமான இடங்கள் இருந்தும், மிகவும் குறுகிய இந்த இடத்தை ஏன் தேர்வு செய்து நகராட்சி அதிகாரிகள் பூங்கா அமைத்தார்கள் என தெரியவில்லை. சிறிய இடத்தில் குறைந்த அளவில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இருக்கைகள் அமைப்பதற்கு ரூ.34 லட்சம் செலவானது என அதிகாரிகள் தெரிவிப்பது ஏமாற்று வேலையாக உள்ளது. இதுபோல், பெயருக்கு பூங்கா அமைப்பதுபோல் லட்சக்கணக்கில்  நகராட்சி அதிகாரிகள் கொள்ளையடித்து வருகின்றனர். என்பது தான் உண்மை. இதுகுறித்து சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர். நகராட்சி உதவி பொறியாளர் பிரபாகரன் கூறுகையில், ‘‘மேற்கண்ட பூங்கா ரூ.34 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டது. இதற்கான பணிகள் எப்போது துவங்கப்பட்டது என சரியாக தெரியவி–்ல்லை. 2 மாதங்களுக்கு முன் பூங்கா பணிகள் முடிக்கப்பட்டது. ஆனால், அதற்கு திறப்பு விழா எதுவும் நடத்தப்படவில்லை. பொதுமக்களுக்கு தேவை என்றால் அதனை பயன்படுத்திக்கொள்ளலாம். பூங்காவை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : municipality park , Municipality park
× RELATED ராசிபுரத்தில் பூட்டிக்கிடக்கும் நகராட்சி பூங்கா