×

தினை, சோளம், பசுந்தீவனங்களுடன் சின்னதம்பி யானைக்கு சமைக்கப்பட்ட உணவு: பயிற்சிக்கு பின்னர் வனத்தில் நடமாடவிட வனத்துறை முடிவு

பொள்ளாச்சி: கோவை அருகே வீட்டில் பிடிபட்ட சின்னதம்பி யானை டாப்சிலிப்பில் விடப்பட்டது. ஆனால் சின்னதம்பி யானை அங்கிருந்து கிளம்பி உடுமலை அருகே செங்கழனிபுதூர், மடத்துக்குளம், கண்ணாடிபுதூர் ஆகிய கிராம பகுதிக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது.அங்குள்ள கரும்பு தோட்டங்கள், வயல்வெளிகளுக்குள் புகுந்து பயிர்களை தின்று நாசம் செய்து வந்தது. கடைசியாக கண்ணாடிபுதூரில் முகாமிட்டிருந்த சின்னதம்பி யானை விவசாயிகளை திணறடித்தது. இதனால் சென்னை உயர்நீதி மன்ற உத்தரவுபடி மயக்க ஊசி செலுத்தி சின்னதம்பி யானை பிடிக்கப்பட்டது. பின்னர் கும்கிகள் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்ட சின்னதம்பி யானை பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட டாப்சிலிப் வனத்துக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து டாப்சிலிப்பை அடுத்த வரகளியாறு முகாமுக்கு சின்னதம்பி யானை கொண்டு செல்லப்பட்டது.

அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த மரக்கூண்டில் (கரோல்) சின்னதம்பி யானை அடைக்கப்பட்டது. முதலில் கூண்டுக்குள் செல்ல சின்னதம்பி யானை அடம்பிடித்தது. ஆனால் பின்னர் அமைதியாக கூண்டுக்குள் சென்றது.சின்னதம்பி யானையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். சின்னதம்பி யானைக்கு உணவு பரிமாறவும், கவனிக்கவும் பாகன்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 5 கும்கிகளும் இரவு பகலாக பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளன.  இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வி. கணேசன் கூறும்போது, சின்னதம்பி யானை முதலில் கூண்டுக்குள் செல்ல அடம்பிடித்தது. ஆனால் பின்னர் சகஜ நிலைக்கு திரும்பி கூண்டுக்குள் சென்றது. உணவும் சாப்பிட ஆரம்பித்தது. கூண்டுக்குள் அடைக்கப்பட்டுள்ள சின்னதம்பி யானையை வனத்துறையினர், கால்நடை மருத்துவர் கலைவாணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பராமரித்து வருகிறார்கள்.

 சின்னதம்பி யானையின் உடல்நிலை பற்றி கால்நடை மருத்துவர் கலைவாணன் பரிசோதித்து வருகிறார்.சின்னதம்பி யானைக்கு தினை, சோளம், பசுந்தீவனம் அடங்கிய சமைக்கப்பட்ட உணவு கொடுக்கப்படுகிறது. இந்த உணவு காலை, மாலை ஆகிய 2 வேளைகளில் வழங்கப்பட்டு வருகிறது. சின்னதம்பி யானை தண்ணீர் குடிக்க மரக்கூண்டில் பேரல்கள் வைக்கப்பட்டுள்ளது. சின்னதம்பி யானைக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்படும். கூண்டுக்குள் வைத்து சின்னதம்பி யானைக்கு அளிக்கப்படும் உரிய பயிற்சிக்கு பின்னர் வனத்துக்குள் சின்னதம்பி யானை உலா வர அனுமதிக்கப்படும். அந்த நேரத்தில் மற்ற வன விலங்குகள் போல இயற்கை உணவுகளை சின்னதம்பி யானை சாப்பிட வழிவகை ஏற்படும், என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Millet, sorghum, greenery, chinnathampi elephant, food, forest and forest
× RELATED நான் முதல்வன் திட்டம் மூலம் 28 லட்சம்...