×

தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில் டெல்டாவில் பிரசாரத்தை தொடங்கியது: 3 தொகுதிகளை கேட்டு மிரட்டும் பாஜ

அறந்தாங்கி: பாராளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக-பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையில், ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் தாமரை சின்னத்தை வரைந்து, பாஜகவினர் தேர்தல் பணியை தொடங்கியுள்ளதால், அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியில் ராமநாதபுரம், திருச்சுழி, அறந்தாங்கி உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, பாஜ உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் அன்வர்ராஜா வெற்றி பெற்று, தற்போது ராமநாதபுரம் எம்.பியாக உள்ளார்.

இந்த நிலையில் விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெறுவது  உறுதியாகி விட்டது. இருப்பினும் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது, அது எந்தெந்த தொகுதிகள் என்பது இதுவரை உறுதியாகவில்லை. தற்போது, எம்.பியாக  உள்ள கட்சியின் நிர்வாகிகள், தாங்கள் வெற்றி பெற்ற தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுத்தர தயாராக இல்லை. இதனால்தான் அதிமுக-பாஜக இடையேயான தொகுதி பங்கீடு இழுபறியாக உள்ளது. இந்நிலையில், அதிமுகவின் மாநில சிறுபான்மை பிரிவு செயலாளரும், வக்பு வாரியத் தலைவருமான அன்வர்ராஜா வெற்றி பெற்ற ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியை பெற பாஜ கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் சிறுபான்மையினர் சமூகத்தில் எம்.பியாக உள்ள அன்வர்ராஜா தொகுதியை பாஜவிற்கு வழங்க அதிமுக மேல்மட்ட தலைவர்கள் தயங்கி வருகின்றனர்.

 இந்த நிலையில் தங்களுக்கு செல்வாக்கு உள்ள ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியை கேட்டுப் பெறுவதில் பாஜவினரும் தீவிரம் காட்டி வருகின்றனர். பாஜகவின் மூத்த தலைவர்கள் பலர் ராமநாதபுரம் தொகுதியை பாஜவிற்கு பெற்று தர கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் அறந்தாங்கி தொகுதியைச் சேர்ந்த பாஜகவினர் அறந்தாங்கி தொகுதிக்கு உட்பட்ட அறந்தாங்கி, கட்டுமாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ‘‘மீண்டும் மோடி..வேண்டும் மோடி…வெற்றிச்சின்னம் தாமரை’’ என எழுதி பாஜவின் சின்னமான தாமரையை சுவர்களில் வரைந்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் தேர்தல் தேதி மாதத்தை குறிப்பிடாமல் 2019- எனவும் எழுதி வைத்துள்ளனர்.

இன்னும் தொகுதியே ஒதுக்கலை..அறந்தாங்கி தொகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் கூறியது: இன்னும் தொகுதி பங்கீடே இறுதி செய்யப்படாத நிலையில் பாஜவினர் தாமரை சின்னத்தை வரைந்துள்ளது தேவையற்ற ஒன்று. இது அதிமுகவினரிடையே குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த தொகுதியில் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக அன்வர்ராஜா எம்.பியாக உள்ளார். அவர் இங்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ளது.  அதே சமயம் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்படும் பட்சத்தில் இங்கு நிறுத்தப்படும் வேட்பாளரின் வெற்றிக்காக நாங்கள் கடுமையாக பாடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

பாராளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக-பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையில், ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அறந்தாங்கி தொகுதியை பெறும் ஆர்வத்தில் பாஜகவினர் அறந்தாங்கியில் சுவர் விளம்பரங்கள் வரைந்து தேர்தல் பணியை தொடங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : campaign ,Delta , Volume distribution, delta, campaign, volume, BJP
× RELATED திருவாரூர் அருகே கொரடாச்சேரியில்...