×

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை ரஜினிகாந்த் அறிக்கை... அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து!!

சென்னை: சென்னை: வருகின்ற பாராளுமன்றத்தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. தமிழக சட்டமன்றத்தேர்தல் தான் எங்களது இலக்கு. நடைபெறவிருக்கும் பாராளுமன்றத்தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்தக்கட்சிக்கும் கிடையாது. அதனால் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படமோ, மன்றத்தின் கொடியோ, எந்தக்கட்சிக்கும் ஆதரவாகவோ, பிரச்சாரம் செய்வதற்காகவோ யாரும் பயன்படுத்தக்கூடாது. தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனை தண்ணீர். வரவிருக்கும் தேர்தலில் மத்தியில் நிலையான, வலுவான ஆட்சி அமைத்து யார் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்த்து வைக்கக்கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறோர்களோ அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார்.

தமிழிசை சவுந்தரராஜன்;
மக்களவை தேர்தலில் ரஜினியின் நிலைப்பாடு சரியான முடிவுதான், ரஜினியின் அறிக்கை பாஜகவுக்கு எதிரானது கிடையாது; மத்தியில் வலுவான ஆட்சி செய்வது, தண்ணீர் பிரச்னையை தீர்த்தது யார் என மக்களுக்கு தெரியும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மார்க்கிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்;
ரஜினிகாந்த் போன்றவர்கள் நல்லவர்கள் பக்கம் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. மத்தியில் நல்லாட்சி வந்தால் தான் தண்ணீர் பிரச்சனை தீரும். மத்தியில் நல்லாட்சி அமைந்தால்தான் மாநில அரசியலிலும் மாற்றம் கொண்டு வர முடியும். நல்லவர்களுக்கு ஆதரவு இல்லை என்றால், எதிரானவர்களுக்கு ஆதரவா என புரிந்துக்கொள்ளப்படும் என மார்க்கிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார்;
தனது நிலைப்பாட்டை அறிவித்த ரஜினிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பது ரஜினியின் கொள்கை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தொல்.திருமாவளவன்;
ரஜினியின் அறிவிப்பு நாடாளுமன்ற தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மக்களவை தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என ரஜினி அறிவித்திருப்பது அவரது தனித்தன்மையை குறிக்கிறது என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு எதிராக மத்திய அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் துணை நிற்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

கராத்தே தியாகராஜன்;
பாஜக, அதிமுக ஆதரவு தந்தால் அரசியல் பயணம் பாதிக்கும் என்பது ரஜினிக்கு தெரியும். எதிர்பார்த்த முடிவுதான் ரஜினியின் அறிக்கை மூலம் வெளியாகியுள்ளது என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

கே.பி.முனுசாமி;
ரஜினி முதலில் மக்களை சந்திக்கட்டும், பிறகு தேர்தலை சந்திக்கலாம் என தஞ்சையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டியளித்தார்.

வைகைச்செல்வன்;
மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என்பதன் மூலம் ரஜினியின் அரசியல் பயணம் நீர்த்துப் போய்விட்டது. ரஜினி வெளியிட்ட அறிக்கை குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். 1996 முதல் ஒவ்வொரு முறையும் அரசியலில் நுழைவேன் என்பதை நீர்த்துப்போகச் செய்துவிட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆர்.பி.உதயகுமார்;
ரஜினி கூறியிருப்பது போன்று அதிமுக அரசுதான் கோடை காலத்தில் கூட மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அதனால் ரஜினியின் ஆதரவு எங்களுக்கு தான் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajinikanth ,elections , Parliamentary election, Rajinikanth report, political party leaders
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...