×

தாமிரபரணி நதிநீர் இணைப்பு திட்டம் 10 ஆண்டுகளாக இழுத்தடிப்பு தள்ளாடும் தமிழகத்தின் முதல் நதிநீர் இணைப்பு திட்டம்

* பணிகளை தொடர பொதுப்பணித்துறை தீவிரம் காட்டுமா?

நெல்லை : நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் வறட்சி பகுதிகளை செழிப்பாக்க 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டம் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இத்திட்டத்தின் 3வது கட்ட பணிகளை வரும் மார்ச் மாதத்தில் பொதுப்பணித்துறை தொடங்க உள்ளது. பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன் பணிகள் தொடங்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியா முழுவதும் வறட்சி காலங்களில் நதிநீர் இணைப்பு திட்டம் குறித்து விவாதங்கள் எழும். பின்னர் அத்திட்டங்கள் அனைத்தும் அறிக்கையோடு நின்று விடுவது வழக்கம். தமிழகத்திலும் நதிநீர் இணைப்பு திட்டங்கள் கருத்துரு வடிவிலும், செயல்பாட்டிலும் உள்ளன. காவிரியுடன் அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, பாம்பாறு, மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாறு ஆகிய நதிகளை இணைப்பது. இரண்டாவதாக பொன்னையாறு - செய்யாறு இணைப்பது, மூன்றாவதாக தாமிரபரணி, கோரையாறு, பச்சையாறு, கருமேனியாறு, எலுமிச்சையாறு மற்றும் நம்பியாறு ஆகிய 6 நதிகளை இணைப்பது உள்ளிட்ட திட்டங்கள் தீட்டப்பட்டன.

alignment=


இத்திட்டங்களில் முதலாவது திட்டமாக தமிழகத்தில் செயலாக்கம் பெற்ற திட்டம் தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டமாகும். தென்பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு 126 கி.மீ தூரம் ஓடி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் கடலில் கலக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் சராசரியாக 13 ஆயிரத்து 758 மில்லியன் கன அடி தாமிரபரணி தண்ணீர் கடலில் கலக்கிறது. கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் வறட்சியான பகுதிகளுக்கு திருப்பி விடுவதே நதிநீர் இணைப்பு திட்டத்தின் ஒரே நோக்கமாகும்.

தாமிரபரணி ஆற்றில் மணிமுத்தாறு சேரும் இடமான மூவாற்று முகத்தில் கன்னடியன் அணைக்கட்டு உள்ளது. இதில் இருந்து திசையன்விளை எம்.எல். தேரி வரை வறட்சி பகுதிகளுக்கு நீர் செல்ல கால்வாய் வெட்ட முடிவு செய்யப்பட்டது. தாமிரபரணியில் மிகுதியாக பாயும் வெள்ளநீர் செல்ல இருப்பதால் இத்திட்டத்திற்கு வெள்ளநீர் கால்வாய் திட்டம் என்ற பெயர் சூட்டப்பட்டது. கன்னடியன் கால்வாயின் முடிவுப் பகுதியில் தாமிரபரணி ஆற்றின் மழை வெள்ளநீரும், கோரையாறும் சந்திக்கிற இடமான வெள்ளாங்குளி என்னும் இடத்திலிருந்து 73 கி.மீ தூரமுள்ள எம்.எல்.தேரி பகுதி வரை வெள்ளநீர் கால்வாய் வெட்ட முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ரூ.369 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு, கடந்த 2009ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் முதற்கட்டமாக 65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ச்சியாக ஒதுக்கப்பட்ட நிதியின் காரணமாக இத்திட்டப்பணிகள் ஓரளவுக்கு நடந்தன. வெள்ளநீர் கால்வாய் வெள்ளாங்குழி முதல் காரியாண்டி வரை 51.6 கி.மீ தூரம் வரை 3200 கன அடி நீர் கடத்தும் வகையிலும், 57.1 கி.மீ தூரம் வரை 1380 கனஅடி நீர் கடத்தும் வகையிலும், 57.1 கி.மீ முதல் 73 கி.மீ வரை 500 கனஅடி நீர் கடத்தும் வகையிலும் இப்பணிகள் நான்கு நிலைகளாக பிரிக்கப்பட்டன. இதில் தற்போது இரண்டு நிலைகளில் மட்டுமே பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 3 மற்றும் 4ம் நிலை பணிகள்தான் கடந்த 8 ஆண்டுகளாக தள்ளாட்டத்தில் உள்ளது.

alignment=


இதுகுறித்து செங்குளம் விவசாயி வேலையா கூறுகையில், ‘‘வெள்ளநீர் கால்வாய் திட்டத்தால் நெல்லை மாவட்டத்தில் 32 வருவாய் கிராமங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 18 வருவாய் கிராமங்களும் பயன்பெறும். 252 குளங்கள் நிரம்பி 23 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதுபோல் மணிமுத்தாறு பாசனத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தண்ணீர் பெறும் குளங்களுக்கு வருடந்தோறும் பாசன வசதி கிடைக்கும். இத்திட்டத்தை கடந்த 10 ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ஏனெனில் மணிமுத்தாறு அணை தண்ணீரை நம்பி முழுமையாக விவசாயம் செய்ய முடியவில்லை. இத்திட்டத்தால் 5220 கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் விரைந்து செயல்படுத்த வேண்டும்.

விரைவில் பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் எந்த பணிகளையும் புதிதாக துவங்க முடியாது. எனவே தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே 3ம் கட்ட பணிகளை விரைவில் துவங்க வேண்டும்’’ என்றார். மழை வெள்ளத்தின்போது வீணாகும் நீரை, ஆண்டுதோறும் வறண்ட பூமிக்கு அனுப்புவதற்கு தமிழக அரசும், பொதுப்பணித்துறையும் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இத்திட்டப்பணிகள் முறையாகவும், முழுமையாகவும் நடந்திருந்தால் கடந்த 2012ம் ஆண்டே இத்திட்டம் நடைமுறைக்கு வந்திருக்கம். 10 ஆண்டுகள் கடந்த பின்னரும் மூன்றாம் மற்றும் நான்காம் நிலை பணிகள் விரைவு பெறவில்லை. இப்பணிகள் நிறைவு பெற்றால் தண்ணீருக்காக ஏங்கும் விவசாய நிலங்கள் நிச்சயம் செழிப்புறும்.

இந்நிலையில் இத்திட்டத்திற்கான 3வது கட்டப்பணிகளை வரும் மார்ச் மாதத்தில் தொடங்க இருப்பதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். கடந்த அக்டோபர் மாத அரசாணைப்படி இத்திட்டத்திற்காக 216.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருவாய்துறையினர் மூலம் நிலம் கையகப்படுத்துதல் நிறைவு பெற்ற நிலையில், விரைந்து பணிகளை தொடக்க உள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

கடைமடை குளங்களுக்கு தண்ணீர்

இத்திட்டத்தின் உடனடி தேவை குறித்து திசையன்விளை எம்எல் தேரி விவசாயிகள் மேம்பாட்டு சங்க தலைவர் சுதாகர் பாலாஜி கூறுகையில், ‘‘வெள்ளக்கால நதிநீர் இணைப்பு திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக முழுமை பெறவில்லை. மணிமுத்தாறு அணையின் 4வது ரீச்சின் 10வது மடையில் எங்கள் திசையன்விளை சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் அரசூர் கடை மடை குளங்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் பெரும்பாலும் கிடைப்பதில்லை.

இந்த வெள்ளநீர் கால்வாய் அமைக்கப்பட்டால் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். வறட்சியின் பிடியில் சிக்கி உள்ள பகுதிகளில் நெல்லை மாவட்டத்தில் 177 குளங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 75 குளங்களும் நிரம்பும். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிணறுகளில் நல்ல நீரூற்று கிடைக்கும். கடல்நீர், நிலங்களுக்குள் உட்புகுவது தடுக்கப்படும். பருவமழை பெய்யும் போது மட்டும் வீணாக கடலுக்கு செல்லும் சுமார் 13 ஆயிரத்து 758 மில்லியன் கன அடி தண்ணீரில், வெறும் 2 ஆயிரத்து 800 மில்லியன் கன அடி நீரை வெள்ளநீர் கால்வாயில் திருப்பிவிட்டாலே மேற்கண்ட பயன்களை அடைந்துவிட முடியும்.கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி இத்திட்டப்பணி முதலில் துவங்கப்பட்டது.

இம்மாதத்துடன் பணிகள் துவங்கி 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆனாலும் பணிகள் நடந்தபாடில்லை. கடந்த 2018ம் ஆண்டு 3வது கட்ட பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டும் இதுவரை பணிகள் எதுவும் துவங்கவில்லை. அப்பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பணம் அரசுக்கே திரும்பி செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 3வது கட்ட பணிகள் தொடங்கப்பட வேண்டும்.’’ என்றார்.

திட்ட செலவு 500 கோடி அதிகரிப்பு

வெள்ளக்கால்வாய் திட்டத்திற்கு கடந்த 2009ம் ஆண்டு மதிப்பீடு ரூ.369 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு முதற்கட்டமாக ரூ.65 ேகாடி ஒதுக்கப்பட்டது. 2010ம் ஆண்டு ரூ.41 கோடியும், 2011ம் ஆண்டு 107 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதன் பின்னர் 2012-13ம் ஆண்டு பட்ஜெட்டில் இத்திட்டத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் பணிகள் சுணக்கம் அடைந்தன. பணிகள் இழுத்துக் கொண்டே சென்றதால் தற்போது திட்டப்பணிகளுக்கான தொகை  ரூ.872.45 கோடியாக உயர்ந்துள்ளது.

முதலில் திட்டமிட்டதை விட கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு செலவு அதிகரித்துள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அரசின் விரைவுப்படுத்தப்பட்ட பாசன பயன் திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கீடு எதிர்பார்ப்பில் முதல் மற்றும் 2-ம் கட்ட பணிகளுக்கு மாநில அரசு நிதி ஒதுக்கி, பணிகள் செயல்படுத்தப்பட்டன. ஆனால் மத்திய அரசின் நிதி உரிய காலத்தில் கிடைக்காததாலேயே பணிகள் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது.



மார்ச்சில் பணி துவங்குவோம் பொதுப்பணித்துறை தகவல்

வெள்ளக்கால்வாய் திட்டம் குறித்து பொதுப்பணித்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘‘தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதியை கொண்டு 3ம் கட்ட பணிகள் வரும் மார்ச் மாதத்தில் தொடங்கப்படும். இதில் மூலைக்கரைப்பட்டி தொடங்கி முனைஞ்சிப்பட்டி, சிந்தாமணி, காடன்குளம், திருமலாபுரம், விஜயநாராயணம், கோடங்குளம் உள்ளிட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில் கால்வாய் வெட்டப்படும்.

இத்திட்டத்தை பொறுத்தவரை 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் ரூ.200 கோடி நில எடுப்புக்கும், ரூ.100 கோடி திட்ட பணிகளுக்கும் செலவிட வேண்டியதுள்ளது. வெள்ளநீர் கால்வாய் திட்டத்தில் திடியூர், கருமேனியாறு, ராமகிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் நீர்தேக்கங்களும் இடம் பெறுகின்றன. ஆண்டுக்கு 10 தினங்கள் வெள்ளநீரை வறட்சி பகுதிகளுக்கு அனுப்பினால் கூட அப்பகுதியில் குளங்களுக்கும், விவசாயமும் செழிக்கும். 4வது கட்டப்பணிகள் ராமகிருஷ்ணாபுரம் தொடங்கி திசையன்விளை எம்எல் தேரி வரை நடைபெறும்.’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thamiraparani ,Tamil Nadu , Thamirabharani ,Water Connection Project,Tamil Nadu
× RELATED தூத்துக்குடி – திருச்செந்தூர்...