×

கிணற்றுக்கு மின் இணைப்பு வாங்க 25 ஆண்டுகளா? 2 மாதத்தில் இணைப்பு தர வேண்டும்: மின்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கிணற்றுக்கு மின் இணைப்பு வாங்க 25 ஆண்டுகள் காத்திருந்த விவசாயிக்கு 2 மாதங்களுக்குள் மின் இணைப்பு தரவேண்டும் என்று மின்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா பொன்னாபுரத்தைச் சேர்ந்தவர் என்.பாலசுப்பிரமணியன். இவர், கடந்த 2010ல் 3 ஏக்கர் புஞ்சை நிலத்தை வாங்கினார். இந்த நிலத்தில் நவீன முறை விவசாயம் செய்வதற்காக கிணற்றிலிருந்து நீர் இறைப்பதற்காக 20 குதிரைத் திறன் கொண்ட மோட்டாருக்காக மின் இணைப்பு தேவைப்பட்டது. ஏற்கனவே, 1992ல் நிலத்தின் முந்தைய உரிமையாளர் ஈஸ்வரன் 20 குதிரைத்திறன் மின் இணைப்பு கோரி தாராபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். அந்த விண்ணப்பத்தை பரிசீலிக்கக் கோரி பாலசுப்பிரமணியன் தாராபுரம் மின்துறை செயற்பொறியாளரிடம் முறையிட்டார்.

ஆனால், 20 குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார் இணைப்புக்கு பொதுப்பணித்துறையிடம் தடையில்லா சான்று வாங்க வேண்டும் என்று மின்துறை பொறியாளர் தெரிவித்தார். இதையடுத்து, தாராபுரம் பொதுப்பணித்துறை ெசயற்பொறியாளரிடம் பாலசுப்பிரமணியன் விண்ணப்பித்தார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து பாலசுப்பிரமணியன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மின்சாரத்துறை சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியன் ஆஜராகி, ஆற்றுப்படுகையிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள கிணறுகளுக்கு 10 குதிரைத்திறன் மின் மோட்டார்களுக்கு மின் இணைப்பு தர பொதுப்பணித்துறையின் தடையில்லா சான்று தேவை என்று வாதிட்டார்.அகற்கு மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிடும்போது, மனுதாரரின் கிணறு ஆற்றுப் படுகையிலிருந்து 250 மீட்டர் தூரத்தில் உள்ளது என்று தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: மின் இணைப்பு கோரி மனுதாரர் கடந்த 25 ஆண்டுகளாக ஒவ்வொரு மூலையாக அலைந்து பல்வேறு துறைகளின் கதவுகளைத் தட்டியுள்ளார். விவசாயத்தையே நம்பி வாழும் இந்தியாவில் தற்போது படித்த இளைஞர்களும் விவசாயத்தில் மிகுந்து ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்கள். இப்போதாவது அதிகாரிகள் விழித்துக்கொள்ள வேண்டும். மனுதாரரின் விண்ணப்பத்தை 2 மாதங்களுக்குள் பரிசீலித்து மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப்பணித்துறையில் உள்ள அனைத்து செயற் பொறியாளர்களுக்கும் இதுபோன்று தடையில்லா சான்று கோரி வருபவர்களின் விண்ணப்பத்தை குறிப்பிட்ட காலத்தில் 2 மாதங்களுக்கு மிகாமல் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை செயலாளர் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : High Court , Electricity, Electricity, High Court
× RELATED ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர்...