×

புதுவைக்கு தற்காலிக கவர்னரை நியமிக்க வேண்டும்: ஜனாதிபதி, உள்துறை அமைச்சருக்கு முதல்வர் நாராயணசாமி கடிதம்

புதுச்சேரி: மக்களைப் பற்றி சிந்திக்காமல் டெல்லியில் உள்ள    கிரண்பேடியை மாற்ற வேண்டும். தற்காலிக கவர்னரை நியமிக்க வேண்டுமென    ஜனாதிபதி, உள்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்’ என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. புதுவைக்கு கடந்த 2016-ம் ஆண்டில் மத்திய அரசால் கவர்னராக கிரண்பேடி நியமிக்கப்பட்டார். அப்போது முதல், அரசின் நலத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமலும் அரசில் குறுக்கீடும் செய்து வருகிறார். இதை கண்டித்து, முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவையினரும், திமுக-காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் கவர்னர் மாளிகையான ராஜ்நிவாஸ் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். 4வது நாளாக நேற்றும் தர்ணா போராட்டம் தொடர்ந்தது.  இதுபற்றி, முதல்வர் நாராயணசாமி கூறியதாவது: கிரண்பேடி    ஆரம்பம் முதலே மக்களுக்கான நலத்திட்டங்களை முடக்கும் செயல்களில் ஈடுபட்டு    வருகிறார். அதிகார துஷ்பிரயோகம் செய்து, கோப்புகளுக்கு அனுமதி தராமல்    தாமதப்படுத்துகிறார்.

39 கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு 7ம்தேதி கிரண்பேடிக்கு    கடிதம் கொடுத்தேன். மக்கள் பிரதிநிதிகள் போராட்டம் நடத்தியும்,    எதைப்பற்றியும் கவலைப்படாமல் டெல்லிக்கு சென்றுவிட்டார். கவர்னர் இல்லாததால் அரசின் பணிகள் அனைத்தும்    பாதிக்கப்பட்டுள்ளன. இனிமேல்  ஒருநிமிடம்கூட கவர்னராக கிரண்பேடி இங்கு    நீடிக்கக் கூடாது. எங்களின் நியாயமான    போராட்டத்தை மக்கள் ஆதரிக்கின்றனர். மக்களைப் பற்றி சிந்திக்காமல் டெல்லியில் உள்ள    கிரண்பேடியை மாற்ற வேண்டும். தற்காலிக கவர்னரை நியமிக்க வேண்டுமென    ஜனாதிபதி, உள்துறை அமைச்சருக்கு இமெயில் மூலம் கடிதம் அனுப்பியுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
மு.க.ஸ்டாலின் இன்று வருகை: முதல்வர்   நாராயணசாமி  மற்றும் அமைச்சர்களின் போராட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ்   கட்சித்  தலைவர் ராகுல்காந்தி நேற்று வாழ்த்து கூறியுள்ளார். அப்போது,   அறவழியில்  போராட்டத்தை தொடருங்கள் என தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதற்கிடையே இன்று  மதியம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்ட களத்துக்கு  நேரில் வந்து வாழ்த்து தெரிவிக்கவுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Narayanasamy ,Home Minister , New, Governor, Home Minister, Chief Minister Narayanasamy, Letter
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளர், கட்சி...