குசால் பெரேரா 153* ரன் விளாசினார் 1 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது இலங்கை: தென் ஆப்ரிக்கா அதிர்ச்சி

டர்பன்: தென் ஆப்ரிக்க அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், குசால் பெரேராவின் அபார சதத்தால் இலங்கை அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. கிங்ஸ்மீட் மைதானத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 235 ரன் எடுக்க, இலங்கை அணி 191 ரன்னில் சுருண்டது. 44 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய தென் ஆப்ரிக்கா 259 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் டு பிளெஸ்ஸி 90, டி காக் 55 ரன் விளாசினர். இலங்கை பந்துவீச்சில் அம்புல்டெனியா 5, விஷ்வா பெர்னாண்டோ 4, ரஜிதா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 304 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 3ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 83 ரன் எடுத்து திணறியது. ஒஷதா பெர்னாண்டோ 28, குசால் பெரேரா 12 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஒஷதா பெர்னாண்டோ 37 ரன்னில் வெளியேற, டிக்வெல்லா டக் அவுட்டானார். குசால் பெரேரா - தனஞ்ஜெயா டி சில்வா ஜோடி 6வது விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்தது.

டி சில்வா 48 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லக்மல் 0, அம்புல்டெனியா 4, ரஜிதா 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, இலங்கை 226 ரன்னுக்கு 9 விக்கெட் இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. தென் ஆப்ரிக்க வெற்றி உறுதி என அனைவருமே முடிவுகட்டிய நிலையில், குசால் உறுதியுடன் போராடினார். கடைசி விக்கெட்டுக்கு விஷ்வா பெர்னாண்டோ பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அதிரடியாக விளையாடி சதம் அடித்த குசால் தென் ஆப்ரிக்க பந்துவீச்சை சிதறடித்தார். எதிர்பாராத இந்த தாக்குதலில் தென் ஆப்ரிக்கா நிலைகுலைந்தது. இலங்கை அணி 85.3 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 304 ரன் எடுத்து நம்ப முடியாத வகையில் வெற்றியை வசப்படுத்தியது. குசால் 153 ரன் (200 பந்து, 12 பவுண்டரி, 5 சிக்சர்), விஷ்வா 6 ரன்னுடன் (27 பந்து) ஆட்டமிழக்காமல் இருந்தனர். குசால் பெரேரா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இலங்கை 1-0 என முன்னிலை வகிக்க, கடைசி டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் 21ம் தேதி தொடங்குகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: