தண்ணீர் தேவையால் திணறும் டாலர் சிட்டி : ஆமை வேகத்தில் 4வது குடிநீர் திட்டப்பணி

திருப்பூர் : டாலர் சிட்டி என அழைக்கப்படும் திருப்பூர் நகரின் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், நான்காவது குடிநீர் திட்டப்பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. திருப்பூர் மாநகராட்சியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள், சாய பட்டறை ஆலைகள், வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் என நாளுக்கு நாள் வர்த்தக நிறுவனங்கள் அதிகரித்து வருவதால், திருப்பூர் மாநகரின் தண்ணீரின் தேவையும் அதிகரித்து வருகிறது.

கடந்த 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கின்படி 8 லட்சத்து 77 ஆயிரத்து 778 பேர் வசிக்கின்றனர். 2020ம் ஆண்டு மக்கள் தொகை 10 லட்சத்து 80 ஆயிரமாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்நகருக்கு, தற்போதுள்ள காவிரி-1, பவானி-11, 111 ஆகிய கூட்டு குடிநீர் திட்டம் போதுமானதாக இல்லை. தற்போதுள்ள குழாய்கள் பதித்து 20 ஆண்டுகளை கடந்துள்ளதால் குடிநீர் குழாயின் திறன் குறைந்து பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகிறது. இதை தவிர்க்கும் விதமாக அம்ரூத் திட்டத்தின் மூலம் நான்காவது கூட்டு குடிநீர் திட்டத்திற்கான ஆய்வுப்பணிகள் முடிந்து 834 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, மத்திய-மாநில அரசுகளின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வரும் 2050ம் ஆண்டு மக்கள் தொகைக்கு ஏற்ப இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு, கடந்த 2017-ம்  ஆண்டு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. இதில், 50 சதவீதம் மத்திய அரசும், 20 சதவீதம் மாநில அரசும், 30 சதவீதம் ஆசிய வளர்ச்சி வங்கியும் நிதி உதவி வழங்கியுள்ளது. குடிநீர் திட்டத்திற்கான முழுத்தொகையும் மானியமாக கிடைத்துள்ளது. இது, தொழில் துறையினர் மற்றும் திருப்பூர் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertising
Advertising

இத்திட்டத்தின்கீழ், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் தலைமை நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு, அன்னூர் அருகே உள்ள ஒட்டர்பாளையத்தில் சுமார் 6 ஏக்கரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. அங்கிருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, திருப்பூர் மாநகராட்சியில் 46 மேல்நிலை தொட்டிகளில் நிரப்பி, மக்களுக்கு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக, மேலும் 9 இடங்களில் மேல்நிலை தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்து விட்டது. இத்திட்ட பணிகள் குறித்து முழுமையான நுணுக்கம் தெரிந்த பொறியாளர் தமிழ்செல்வன் கடந்த ஆண்டு திடீரென இறந்தார். தற்போதுள்ள மாநகராட்சி பொறியாளர்களுக்கு போதிய அனுபவம் இல்லாததால், குடிநீர் திட்டப்பணிகள் மந்த கதியில் நடக்கிறது. பல கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட குடிநீர் குழாய்கள் முறையாக பதிக்கப்படாமல், 60 வார்டுகளிலும் திறந்தவெளியில் பாதுகாப்பற்ற நிலையில் கிடக்கிறது. குடிநீர் குழாய் பதிக்கவேண்டிய சாலைகளை பலர் ஆக்கிரமித்துள்ளனர். இதை, மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினர் அதிரடியாக அகற்றினால்தான் இப்பணிகள் தங்கு தடையின்றி நடைபெறும். இத்திட்டப்பணிகள், ஆமை வேகத்தில் நடப்பதால் வரும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் நகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என சமூக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘இத்திட்டப்பணி மிகப்பெரியது. படிப்படியாகத்தான் நிறைவேற்ற முடியும். அவசர கதியில் இத்திட்டத்தை நிறைவேற்றினால் யாருக்கும் பலன் இல்லாமல் போகும்’ என்றனர்.

களவுபோகும் குடிநீர் குழாய்

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு, நாட்டின் பல மாநிலங்களில் இருந்து நூல், பஞ்சு மற்றும் துணிகளை லாரிகள் மூலமாக கொண்டு வருகின்றனர். அந்த லாரிகளில், இங்கிருந்து ஆடைகளை ஏற்றிச்செல்கின்றனர். தினமும் நுாற்றுக்குக்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் வந்து, செல்கிறது.  இரவு நேரங்களில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் களவு போகிறது. மாநகராட்சி நிர்வாகம் விழித்துக்கொள்ளாவிடில் பெரும்தொகை செலவிட்டு மீண்டும் குடிநீர் குழாய்களை வாங்க நேரிடும்.

ஆயிரம் அடிக்கு மேல்...!

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் மூலம்  நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டுவிட்டது. திருப்பூர் மாநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரம் அடிக்கு மேல் போர்வெல் அமைத்தாலும் தண்ணீர் கிடைப்பது கேள்விக்குறியாகிவிட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: