மினி லைப்ரரியுடன் இயங்கும் சலூன் : வாசிப்பை வளர்க்கும் தூத்துக்குடி வாலிபர்

தூத்துக்குடி : பொதுவாக சலூன்கள் என்றாலே சில்க் ஸ்மிதா துவங்கி சன்னி லியோன் வரையிலான கவர்ச்சி நடிகைகளின் படங்கள் தான் ஒட்டப்பட்டிருக்கும். இல்லாத பட்சத்தில் சில அரசியல் தலைவர்கள் படம், அரசியல் அரட்டை, முக்கல் முனகலுடன் கூடிய சினிமா குத்துப்பாடல்கள் இவை தான் நம் நினைவிற்கு வரும். ஆனால் இந்த சலூன்களுக்கான இலக்கணத்தை உடைத்தெறிந்து விட்டு 500க்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் ஒரு மினி லைப்ரரி வடிவில் நம்மை வரவேற்கிறது தூத்துக்குடியில் ஒரு சலூன். தூத்துக்குடி மில்லர்

புரத்தை சேர்ந்தவர் பொன்.மாரியப்பன்(36). குடும்ப வறுமைச்சூழலில் 8ம் வகுப்புக்குமேல் தாண்ட முடியாத நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஒரு வக்கீலிடம் குமாஸ்தாவாக பணிபுரிந்துள்ளார். அப்போது வக்கீல் மூலம் அதிகமாக கேட்டறிந்த பொன் மாரியப்பனுக்கு புத்தகங்களின் சினேகமும், படிப்பின் முக்கியத்துவமும், வாசிப்பின் பயனும் பிடித்துப்போனது. இருப்பினும் செல்போன்களின் வரவால் மக்கள் மத்தியில் மறந்துபோன வாசிப்பை மீண்டும் கொண்டுவர வேண்டும் என நினைத்துள்ளார். இதன் விளைவாகவே பொன்.மாரியப்பன், சுசில்குமார் ப்யூட்டிக்கேர்-ஐ துவக்கியுள்ளார். தூத்துக்குடி மில்லர்புரம் பண்டுகரை ரோட்டில் புறாக்கூண்டு சைசில் ஒரு கடையை வாடகைக்கு பிடித்து அதில் தொழிலுக்கு மத்தியில் படிப்பு என்ற நிலையை உருவாக்கியுள்ளார். முதலில் சில புத்தகங்களுடன் லைப்ரரிக்கு அடித்தளம் அமைத்துள்ளார். சில ஆண்டுகளில் புத்தகங்கள் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரித்துள்ளார். இன்னும் அதிகரித்து வருகிறார்.

பொதுமக்கள், குறிப்பாக சிறுவர், சிறுமியரிடம் அதிகமாக புத்தகங்களை படிக்கச் சொல்லும் பொன் மாரியப்பன் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் செல்போன்களின் பயன்பாட்டை குறைத்து விடுமாறு கூறுவதுடன் யாராவது வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவற்றில் மூழ்கி விட்டால் அவர்களுக்கு வாசிப்பின் பயன்குறித்து வகுப்பெடுக்கவும் தவறுவதில்லை.

அவரது சலூனில் புத்தகங்கள் அதிகம் இருப்பதால் லைப்ரரி சலூன் என்றே தூத்துக்குடி மக்கள் அழைக்கும் நிலைக்கு வந்துள்ளது. லைப்ரரியில் பிரபல பேச்சாளர்களான சுகி.சிவம், நெல்லை கண்ணன், தமிழருவி மணியன், பர்வீன் சுல்தானா போன்றோரின் சொற்பொழிவுகளையும் தவறாமல் ஒலிப்பரப்பி வருகிறார். குறிப்பாக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் புத்தகங்களே துணை என்ற பேச்சின் எம்பி 3 வடிவத்தை இயக்கி அனைவரையும் வாசிப்பு உலகத்திற்கே இழுத்துச் செல்கிறார். தனது கடைக்கு வரும் மாணவர்களிடம் நூலகம் குறித்தும் என்ன புத்தகம் படித்தீர்கள்? உபயோகமானதாக இருந்ததா? என்பதை கையேடு மூலம் பதிவிடுங்கள் என்று ஒரு நோட்டு பராமரிக்கிறார். இந்த சலூனில் திருவள்ளுவர், அப்துல்கலாம், மகாத்மா காந்தி, விவேகானந்தர், மகாகவி பாரதியார் படங்களையும் கடவுள்களுக்கு மத்தியில் அப்துல்கலாம் படத்தையும் மாட்டியுள்ளார். மேலும் பூஜை காலங்களில் நமது தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தவும் பொன் மாரியப்பன் தவறுவதில்லை. இவரது வாசிப்பின் ஆர்வம் குறித்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தனது வெப்சைட்டில் 4 பக்க கட்டுரையே எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பொன்.மாரியப்பன் கூறுகையில், ‘நான் படிக்க முடியவில்லையே என்ற உணர்வு மனதில் இருந்தபோது உதித்த யோசனை தான் எனது லைப்ரரி. இதில் முழுக்க முழுக்க எனது உழைப்பில் இருந்து வாங்கிய புத்தகங்களை மட்டுமே வைத்து வருகிறேன். இதற்காக மாதந்தோறும் ஒரு சிறு தொகை ஒதுக்கி புத்தகங்கள் வாங்குகிறேன். நமது மாணவர்களை அதிகம் படிக்கத் தூண்ட வேண்டும் என்பது தான் என் லட்சியம். எனது லைப்ரரியை பார்த்து பல வாடிக்கையாளர்கள் நிதியுதவி அளிக்க முன் வந்தனர். ஆனால் நான் மறுத்துவிட்டேன். இங்குள்ள ஒவ்வொரு புத்தகத்திலும் என் உழைப்பு இருக்க வேண்டும். அப்போது தான் வாசிப்பவர்களின் மனதில் ஆழமாகும். நாம் அனைவரும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஏதாவது புத்தகங்களை படிக்க வேண்டும்’ என உணர்ச்சி பொங்க கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: