தமிழகம் முழுவதும் அறிவித்து 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் 108 பைக் ஆம்புலன்ஸ் வழங்குவதில் தாமதம்

வேலூர் : தமிழகம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக தாலுகா வாரியாக 108 ஆம்புலன்ஸ்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் விபத்து காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் விபத்தில் சிக்கி இறப்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதில் பெரும்பாலான உயிர் இழப்புகள் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்காததால் ஏற்பட்டது என மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டது. இதனை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் கடந்த 2005ம் ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 859 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் 1500 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் 1500 மருத்துவ உதவியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் முதல் அரக்கோணம் வரை 54 ஆம்புலன்ஸ்கள் இயங்குகின்றன. இதில் 250 பேர் வேலை செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 2015ம் ஆண்டு 108 பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. விபத்து நடந்த இடத்திற்கு செல்லும் 108 பைக் ஆம்புலன்ஸ் ஊழியர் படுகாயமடைந்தவருக்கு தேவையான முதலுதவி சிகிச்சைகள் அளித்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க உதவி செய்வார். முதற்கட்டமாக சென்னையில் 23 பைக் ஆம்புலன்ஸ்கள் என மொத்தம் 64 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. படிப்படியாக தாலுகா வாரியாக 108 பைக் ஆம்புலன்ஸ் சேவை விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அறிவிப்புகள் முடிந்து 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் 108 பைக் ஆம்புலன்ஸ் சேவை விரிவுபடுத்தப்படவில்லை. சென்னையை தவிர்த்து மற்ற இடங்களில் மாவட்டத்திற்கு ஒன்று மட்டுமே உள்ளது. இதனால் சாலை விபத்துகளின்போது முதலுதவி சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் கூறுகையில், ‘ வேலூர் மாவட்டத்திற்கு ஒன்று என்கிற விதத்தில் பென்லென்ட் அரசு மருத்துவமனையை மையமாக கொண்டு ஒரு பைக் ஆம்புலன்ஸ் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. விபத்து அதிகம் நடைபெறும் பகுதிகளான அரக்கோணம், வாலாஜா, குடியாத்தம், திருப்பத்தூர் உள்ளிட்ட வளர்ந்துவரும் நகரங்களில் 108 பைக் ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் அவசர காலங்களில் முதலுதவி சிகிச்சை பெறமுடியவில்லை. ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்கும் அவல நிலை உள்ளது. எனவே அரசு அறிவித்து கிடப்பில் போடப்பட்ட 108 பைக் ஆம்புலன்ஸ் சேவையை தாலுகா வாரியாக விரிவாக்கம் செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: