கோடையை சமாளிக்க எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா? தென்மாவட்டங்களுக்கு குறைவாக இயக்கப்படும் ஏசி, சிலீப்பர் பஸ்கள்

நெல்லை: அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் தென்மாவட்டங்களுக்கு குறைவான ஏசி, சிலீப்பர் பஸ்கள் இயக்கப்படுவதால் பயணிகள் தவித்து வருகின்றனர். தனியார் பஸ்களில் ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டியுள்ளதால் கோடை புழுக்கத்தோடு மனபுழுக்கத்திற்கும் ஆளாகியுள்ளனர். தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சென்னையை தலைமையிடமாக கொண்டு 1975ம் ஆண்டு துவக்கப்பட்டது.தமிழகம் முழுவதும் 19 பணிமனைகள் மூலம் விரைவு பஸ்கள் 300 கிமீட்டருக்கும் அதிகமான தூரத்துக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

அல்ட்ரா டீலக்ஸ், செமி டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ் மற்றும் ஏசி, சிலீப்பர் பஸ்கள் என ஆயிரத்து 200 பஸ்கள் தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 50 மட்டுமே ஏசி பஸ்களாக இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை, கோவை, திருப்பூர், பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியைச் சேர்ந்தவர்களே அதிகம் பணியாற்றுகின்றனர். தொழில் நிமித்தமாக அங்கு குடிபெயர்ந்தவர்களும், அவர்களை காண உறவினர்களும் வந்து செல்வதால் தென்மாவட்ட பஸ், ரயில் வழித்தடங்கள் எப்பொழுதும் பயணிகள் கூட்டத்துடனேயே காணப்படுகிறது. இதனாலேயே இப்பகுதியிலிருந்து நெல்லை, தூத்துக்குடி, குமரிக்கு அதிகளவில் தனியார் ஆம்னி பஸ்கள் கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்படுகின்றன.
Advertising
Advertising

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு 8 பணிமனைகள் மட்டுமே உள்ளன. இதில் நெல்லையில் 2 ஏசி பஸ்களும், ஒரு சிலீப்பர் பஸ்சும், தூத்துக்குடி, நாகர்கோவில், திருவனந்தபுரம் பகுதிகளில் இருந்து தலா ஒரு ஏசி பஸ்சும், தலா ஒரு சிலீப்பர் பஸ்சுமே நீண்ட தொலைவிற்கு இயக்கப்படுகிறது.

இதனால் ெதன் மாவட்ட மக்கள் வேறு வழியின்றி 2 ஆயிரம் வரை கட்டணம் செலுத்தி தனியார் சொகுசு பஸ்களை நாடிச் செல்லும் நிலை உள்ளது. நெல்லையில் இருந்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக ஏசி பஸ்சில் சென்னைக்கு பயணிக்க 860ம், வார நாட்களில் வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் (தூங்கும் வசதிகொண்ட) சிலீப்பர் பஸ்சில் பயணிக்க ₹ 1315ம், பிற நாட்களில் பயணிக்க 70 குறைவு செய்து 1245ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தற்போது தூங்கும் வசதி கொண்ட பஸ்களில் பொதுமக்கள் பயணிக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில் தென்மாவட்டங்களுக்கு இத்தகைய பஸ்கள் கூடுதலாக ஒதுக்கப்படாத நிலை தொடர்கிறது. இதுதவிர கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் பெரும்பாலானோர் ஏசி பஸ்களில் பயணிக்க விரும்புகின்றனர். ஆனால் தென்மாவட்டங்களுக்கு அவையும் போதியளவில் இயக்கப்படுவதில்லை. சென்னையில் வசிக்கும் ஒருவர் தனியார் பஸ்சில் சொந்த ஊரான நெல்லை, தூத்துக்குடி வந்து செல்ல வேண்டும் என்றால் பஸ்சிற்கு மட்டும் 4 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் இப்பகுதிகளுக்கு கூடுதல் ஏசி பஸ்கள், சிலீப்பர் பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில்; அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு கூடுதல் தூங்கும் வசதி கொண்ட பஸ்கள், ஏசி பஸ்கள் விரைவில் வழங்கப்படும். இத்தகைய பஸ்கள் கூண்டு கட்டும் பிரிவில் பணிகள் முடியும் நிலையில் உள்ளது. இதைதொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவையான பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: