பாவூர்சத்திரம் அருகே அடுத்தடுத்து நடந்த சோகம்... மரக்கிளையை வெட்டிய இன்ஜினியர் மின்சாரம் தாக்கி பலி: துக்கம் கேட்க சென்ற தாத்தா லோடு ஆட்டோ மோதி சாவு

பாவூர்சத்திரம்: மரக்கிளையை வெட்டிய இன்ஜினியர் மின்சாரம் தாக்கி இறந்தார். இதையொட்டி துஷ்டி கேட்க சென்ற தாத்தா லோடு ஆட்டோ மோதி பரிதாபமாக இறந்தார். பாவூர்சத்திரம் பகுதியில் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சாலைப்புதூர் காந்தி அண்ணாநகரைச் சேர்ந்தவர் விவசாயி சமுத்திரபாண்டி. இவருக்கு 3 மகன்கள். இதில் இன்ஜினியரிங் படித்துள்ள இளைய மகன் மணிவண்ணன்(32) நெல்லையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். தினமும் பைக்கில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். மேலும் பயணிகள் நலச்சங்க தலைவராகவும் மணிவண்ணன் இருந்தார். சைடு தொழிலாக தேயிலை வியாபாரமும் செய்து வந்தார். இவர்களுக்கு சொந்தமான தோட்டம் அடைக்கலாப்பட்டணத்தில் இருந்து பட்டமுடையார்புரம் செல்லும் ரோட்டில் உள்ளது. அதில் கொய்யா, தக்காளி உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிட்டுள்ளனர். தோட்டத்தில் உள்ள மின் மோட்டாருக்கு வரும் மின்சாரம் அடிக்கடி தடைபட்டு வந்ததால் மணிவண்ணன் எதற்காக இப்படி நடக்கிறது என ஆராய்ந்தார்.

அப்போது மரக்கிளைகள் வயரில் படுவதால் அடிக்கடி பீஸ் போனது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை தடையாக இருந்த மரக்கிளைகளை வெட்டிக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிளை முறிந்து உயர் மின் அழுத்த கம்பியில் விழுந்ததால் மணிவண்ணனை மின்சாரம் தாக்கியது. இதில் மரக்கிளையிலே அவர் சடலமானார். தகவலறிந்து ஆலங்குளம்  தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.இறந்த மணிவண்ணனுக்கு  பிரபாகர், ராம்நாத சுதாகர் என இரு அண்ணன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகிவிட்டது. இதில் பிரபாகர் பிரதமரின் கமாண்டோ படையில் வேலை பார்த்து ஒரு மாதத்திற்கு முன்புதான் ஓய்வு பெற்றார். 2வது அண்ணன் ராம்நாத சுதாகர் ராணுவ வீரர். தற்போது ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றி வருகிறார். தம்பி இறந்த செய்தியறிந்து இவர் உடனடியாக ஊர் புறப்பட்டு வந்தார். இறந்த மணிவண்ணனுக்கு வீட்டில் தீவிரமாக பெண் பார்த்து வந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துவிட்டது.

இதற்கிடையில் மணிவண்ணன் இறந்த செய்தி உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திப்பணம்பட்டியைச் சேர்ந்த விவசாயி தர்மராஜ்(76), உறவினர் அரிச்சந்திரன் மனைவி மரகதவள்ளி(65) இருவரும் நேற்று மாலை மொபட்டில் சாலைப்புதூருக்கு புறப்பட்டனர். மகிழ்வண்ணநாதபுரம் பங்கில் பெட்ரோல் போட்டுவிட்டு ரோட்டுக்கு வந்தபோது கழுநீர்குளத்தில் இருந்து தென்காசிக்கு வந்த லோடு ஆட்டோ இவர்கள் மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் தர்மராஜ் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த மரகதவள்ளி நெல்லை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தர்மராஜின் அக்காள் பேரன்தான் மணிவண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: