குமரி முழுவதும் கைவரிசை உடைந்து போன மிக்சி, கேஸ் ஸ்டவ் கொடுத்து பணம் பறிக்கும் கும்பல்: பொதுமக்கள் உஷாராக இருக்க காவல்துறை வேண்டுகோள்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் உடைந்து போன வீட்டு உபயோக பொருட்களை கொடுத்து மோசடி செய்யும் கும்பல் அதிகரித்துள்ளது. அது போன்ற நபர்கள் வீட்டுக்கு வந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் புதுவிதமான மோசடிகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் வீட்டு உபயோக பொருட்களுடன் வீடுகளுக்கே வந்து பரிசு கூப்பனை சுரண்ட செய்து, நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி என கூறி மிக்சி, கேஸ் ஸ்டவ், வெட் கிரைண்டர் ஆகியவற்றை வெறும் 4 ஆயிரம் ரூபாய்க்கு கொடுத்து விட்டு செல்கிறார்கள். இது மட்டுமின்றி பிரபல வணிக நிறுவனங்களின் முகவரியை கொடுத்து அதன் அருகில் புதிய ஷோரூம் திறக்க உள்ளோம். திறப்பு விழா அன்று நீங்கள் அதிஷ்டசாலி என்பதால், உங்களுக்கு பீரோ, டி.வி. போன்றவை தருவோம் என கூறி செல்கிறார்கள். இவ்வாறு வழங்கப்பட்ட மிக்சி, கிரைண்டர் மற்றும் கேஸ் ஸ்டவ் பழுதானதாகும். அந்த கும்பல் சென்ற பின்னரே பணம் கொடுத்து ஏமாந்தது பொதுமக்களுக்கு தெரிய வருகிறது. கிராமப்புறங்கள் மட்டுமின்றி நகர பகுதிகளிலும் இது போன்ற மோசடிகள் அதிகம் நடக்கின்றன.

குறிப்பாக வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து இந்த மோசடி கும்பல் கைவரிசை காட்டி வருகிறது. குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே வைக்கல்லூர் பகுதியை சேர்ந்த முருகன் (53) என்ற மரம் ஏறும் தொழிலாளி இதே பாணியில் ஏமாற்றப்பட்டுள்ளார். பழுதான கேஸ் ஸ்டவ், மிக்சி ஆகியவற்றை கொடுத்து, அவரிடம் இருந்து ₹4,800  பறித்துள்ளனர். பரிசு கூப்பனை கொடுத்து பிப்ரவரி 15ம் தேதி புதுக்கடையில் தங்களது கிளை நிறுவனம் திறப்பு விழா நடப்பதாகவும், அங்கு வந்தால் பீரோ தருவதாக கூறியுள்ளனர். அதை நம்பி நேற்று புதுக்கடைக்கு வந்து விசாரித்த போது தான் தான் ஏமாற்றப்பட்டது, முருகனுக்கு தெரிய வந்தது.

இதே போல் நாகர்கோவில், குளச்சல் பகுதியிலும் இது போன்ற கும்பல் வீடுகளுக்கு சென்று  கேஸ் ஸ்டவ், மிக்சி போன்றவற்றை காட்டி பணம் பறித்துள்ளனர். குறிப்பாக மலையோர கிராமங்கள், மீனவ கிராமங்களில் அதிகம் மோசடி நடந்துள்ளன. இந்த வாலிபர்களுக்கு சுமார் 30 ல் இருந்து 35 வயதுக்குள் தான் இருக்கும். பொதுமக்களை கவரும் வகையில் பேசி, பணத்தை பறிக்கிறார்கள்.

நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி. இதுவரை 100 பேர் வரை கூப்பன் சுரண்டியும், அவர்களுக்கு கிடைக்காத அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்கிறது என்ற ரீதியில் பேசி மனதை மாற்றுகிறார்கள். அது மட்டுமின்றி வீட்டில் கணவர் மற்றும் குழந்தைகள் விவரங்களை கேட்டு வீட்்டில் அந்த பெண் தனியாக இருக்கிறார் என்பதையும் உறுதிப்படுத்தி கொள்கிறார்கள். எனவே இந்த கும்பல் திருட்டு கும்பலாக கூட இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது பற்றி தற்போது காவல் நிலையங்களுக்கு புகார்கள் குவிய தொடங்கி உள்ளன. இது போன்ற மோசடி கும்பல்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முன் பின் தெரியாத நபர்களை, வீட்டுக்குள் அனுமதிக்க கூடாது. இந்த கும்பல் வந்தால் உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கோ, அருகில் உள்ள காவல் நிலையத்துக்கோ  தகவல் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: