அரவக்குறிச்சி அருகே சேவல் சண்டை 5ஆயிரம் சேவல்கள் அந்தரத்தில் நடத்திய அதிரடி தாக்குதல்: 4 ஆண்டுகளுக்கு பிறகுகண்கொள்ளா காட்சி

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி பூலாம்வலசில் பிரபலமான சேவல் கட்டு உயர்நீதி மன்ற அனுமதியுடன் நேற்று துவங்கியது. இதில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான சேவல்கள் கலந்து கொண்டன. பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் போன்றவை தமிழகத்தின் பல பகுதிகளில் பிரபலமாக நடைபெறுவது போல கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பூலாம்வலசில் நடைபெறும்  சேவல் கட்டு (சண்டை) பிரசித்தி பெற்றது. சேவல் கட்டின் போது அரவக்குறிச்சி சுற்றுப் பகுதியினர் மட்டுமல்லாது தமிழகத்தின் பிற பகுதியிலிருந்தும் சேவல் கட்டு பிரியர்கள் மற்றும் அதனை ஆர்வத்துடன் வேடிக்கை பார்க்க வரும் பார்வையாளர்கள் என்று பூலாம்வலசு கிராமமே களைகட்டும். இந்த சேவல் கட்டு மக்கள் கலாச்சாரத்துடன் ஒன்றியதாக வீர விளையாட்டாக கருதப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு நடைபெற்று வருகின்றது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த சேவல் கட்டில் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் சேவல் கட்டு பிரியர்கள்  இதற்கென்றே பிரத்தியேகமாக வளர்க்கப்பட்ட ஏராளமான கட்டு சேவலுடன் வந்து கலந்து கொள்வார்கள்.

கடந்த நான்கு ஆண்டுகளாக அனுமதி கிடைக்காததால் பூலாம்வலசில் சேவல்கட்டு நடக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் முயற்சித்தும் நடத்த இயலவில்லை. இந்த ஆண்டு பொங்கலுக்கும் அனுமதி கிடைக்கவில்லை. பின்னர் அனுமதி கேட்டு மதுரை உயர்நீதி மன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்று உயர்நீதி மன்ற வழிகாட்டுதலின்படி நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு போட்டி துவங்கியது. நேற்று முதல் நாள் நடந்த சேவல்கட்டு போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து 5 ஆயிரம் சேவல்கள் கலந்து கொண்டன.  இந்த சேவல்கள் ஏற்கனவே நன்கு பயிற்சி பெற்றிருந்ததால் அந்தரத்தில் பறந்து பறந்து எதிர் சேவலை தாக்கி கொத்தி குதறியது. கால்களால் அட்டாக் செய்தது. தரைப்படை தாக்குதல், விமானப்படை தாக்குதல் போல இந்த தாக்குதல்கள் இருந்தது.2வது  நாளாக இன்றும், கடைசி நாளாக நாளையும் சேவல்கட்டு நடக்கிறது.

முதல் நாள் சேவல்கட்டில் அரவக்குறிச்சி சுற்றுப் பகுதியினர் மட்டுமல்லாது தமிழகத்தின் பிற பகுதியிலிருந்தும் சேவல் கட்டு பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். போட்டிக்கு வந்திருந்த சேவல்களுக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டுள்ளதா,  உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதா மருத்துவர்கள் பரிசோதனை செய்து சான்று கொடுக்கப்பட்ட சேவல்கள் மட்டுமே போட்டியில் அனுமதிக்கப்பட்டன. தோல்வி அடைந்த சேவலை வெற்றி பெற்ற சேவல் உரிமையாளர்களிடம் கொடுத்து விடவேண்டும். இதுதான் போட்டிக்கான பரிசு.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: