×

முதல் டெஸ்ட்: சொந்த மண்ணில் மண்ணைக் கவ்விய தென் ஆப்பிரிக்கா..... 1 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை த்ரில் வெற்றி

டர்பன்: தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. தென்ஆப்பிரிக்கா – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 235 ரன்னிலும், இலங்கை 191 ரன்னிலும் சுருண்டன. 44 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை விளையாடிய தென்ஆப்பிரிக்க அணி அணி 79.1 ஓவர்களில் 259 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. அந்த அணி கடைசி 8 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை தாரைவார்த்தது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக கேப்டன் பிளிஸ்சிஸ் 90 ரன்கள் விளாசினார். இலங்கை அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய புதுமுக சுழற்பந்து வீச்சாளர் எம்புல்டெனியா 5 விக்கெட்டுகளும், வேகப்பந்து வீச்சாளர் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

தென்னாப்பிரிக்காவின் வெற்றியை பறித்த குஷால் பெரேரா
இதனையடுத்து இலங்கை அணிக்கு 304 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடின இலக்கை நோக்கி 2–வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு 221 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டத்தை தொடங்கியது இலங்கை. அந்த அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. விக்கெட்டுகள் மளமளவென வீழத் தொடங்கியதால் நிதானமாக ஆடிவந்த குஷால் பெரேரா அதிரடியாக ஆடத் தொடங்கினார். இலங்கை அணி 226 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விழிம்பில் இருந்தது.

7 ஆண்டுகளுக்கு பின் வெற்றி
இந்நிலையில் கடைசி விக்கெட்டுக்கு விஸ்வா பெர்னாண்டோவுடன் ஜோடி சேர்ந்த குசால் பெரேரா சிக்ஸர், பவுண்டரிகளுமாக விளாசினார். இறுதியில் இலங்கை அணி 85.3 ஓவர்களில் 305 ரன்கள் வெற்றி இலக்கை எட்டி வரலாறு படைத்தது. குசால் பெரேரா 12 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் விளாசி 153 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வித்திட்டார். இதன்மூலம் 7 ஆண்டுகள் கழித்து தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது இலங்கை அணி.

தொடரை வெல்லும் முனைப்பில் இலங்கை
இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம் அடுத்த போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் தென் ஆப்பிரிக்கா அணி உள்ளது. அடுத்த போட்டியை டிரா செய்தாலே இலங்கை அணி தொடரை கைப்பற்றிவிடும். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Test ,win ,South Africa ,Sri Lanka , South Africa vs Sri Lanka, 1st Test
× RELATED தேர்தல் பறக்கும்படை சோதனை; ராஜபாளையத்தில் ₹3.33 லட்சம் பறிமுதல்