கல்லுக்குட்டை பகுதியில் உள்ள குப்பை கிடங்குக்கு தீ வைக்கும் விஷமிகள்

வேளச்சேரி: மேடவாக்கம் குப்பை கிடங்குக்கு சமூக விரோதிகள், அடிக்கடி தீ வைப்பது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு, நிரந்தர தீர்வு கிடைக்குமா என வாகன ஓட்டிகள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். மேடவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 40க்கும் மேற்பட்ட நகர்களும், 200க்கும் மேற்பட்ட தெருக்களும் உள்ளன. இங்கு ஒரு நாளைக்கு 10 டன் குப்பை சேகரமாகின்றன. அவை, வேளச்சேரி பிரதான சாலையை ஒட்டியுள்ள மேடவாக்கம் கல்லுக்குட்டை பகுதியில் உள்ள குப்பை கிடங்கில், பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் குப்பை கிடங்கை சுற்றிலும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் பெருகிவிட்டன. இதையடுத்து, அங்கு குப்பை கொட்டுவதால் குப்பை துர்நாற்றம் வீசுவதோடு சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு சுற்றுவட்டார பகுதி மக்கள் மற்றும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கண் எரிச்சல், சுவாசப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.எனவே, குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும் என தொடர்ந்து இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மாவட்ட நிர்வாகத்திற்கு இந்த பிரச்னை கொண்டு செல்லப்பட்டும், குப்பை கிடங்கை மாற்ற இதுவரை நடவடிக்கை இல்லை.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மேடவாக்கம் குப்பை கிடங்குக்கு சமூக விரோதிகள் அடிக்கடி தீ வைப்பதும், தீயணைப்பு வீரர்கள் வந்து அணைப்பதும் தொடர் கதையாக உள்ளது.

குப்பைகள் எரியும் சமயத்தில் அளவுக்கு அதிகமாக புகை வெளியாவதால் அப்பகுதி  முழுவதும் புகைமூட்டமாக காட்சி அளிக்கிறது. அதனால் பொதுமக்கள், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், சுவாச பிரச்னை ஏற்படுகிறது. அதில், குழந்தைகள் முதியோர், நோயாளிகளே அதிக அவதிக்குள்ளாகிறார்கள். இதேப்போல 2 நாட்களுக்கு முன்பு குப்பை எரிக்கப்பட்டது. தகவலறிந்து ஊராட்சி நிர்வாகம் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்து, தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த பிரச்னை இங்கு அடிக்கடி தொடர்வதால் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: