தமிழக அரசின் புதிய அரசாணைக்கு எதிர்ப்பு மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தம் : காவல் நிலையத்தை முற்றுகை

சென்னை: சீனா இன்ஜின் பயன்படுத்தி மீன் பிடிக்கலாம் என, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, காசிமேட்டில் மீனவர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு அதிக குதிரைதிறன் உள்ள 240 எச்.பி., சீனா இன்ஜினை பயன்படுத்தி மீன் பிடிக்கலாம் என புதிய அரசாணையை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த அரசாணையை திரும்ப பெறக்கோரியும் காசிமேட்டில் விசைப்படகு உரிமையாளர் சங்கத்தினர், நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், விசைப்படகுகளை கரையில் நிறுத்தி போராட்டத்தில் கலந்து ெகாண்டனர். இதுகுறித்து விசைப்படகு உரிமையாளர் சங்கத்தினர் கூறியதாவது: தமிழக கடற்பகுதியில் அதிக குதிரை திறன் கொண்ட 240 எச்.பி., சீனா இன்ஜின் பயன்படுத்தலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே, 2016ல்  தமிழக அரசு 240 எச்.பி., மோட்டார் இன்ஜின் பயன்படுத்தலாம் என அரசாணை கொண்டு வந்தது. அதை எதிர்த்து, மீனவ சங்கங்கள், மீனவ கிராம மக்களை ஒன்று திரட்டி, போராட்டம் நடத்தியதால் அரசாணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

அப்படி இருந்தும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்கள் சீனா இன்ஜினை பயன்படுத்தினர். இதற்கு மீனவர்கள், மீனவ சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து பெரும் போராட்டம் நடந்தது. இதில் போலீசாருக்கும் மீனவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. மீனவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டது. மீனவர்கள் தொடர்ந்து போராடியதால் வழக்கு திரும்ப பெறப்பட்டது. விசைப்படகுகளில் பொருத்தப்பட்ட சீனா இன்ஜின் அதிகாரிகள் முன்னிலையில் போலீசார் துணையுடன் அகற்றப்பட்டது. தற்போது மீண்டும் அதே அரசாணை கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், கட்டுமரம், சிறு விசை படகுகளில் மீன் பிடிப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, மீன் குஞ்சுகள், பவள பாறைகள் அழியும்  அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து, காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தை மீனவ சங்கத்தினர்  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டோம். தொடர்ந்து, மீன்வளத் துறை இயக்குனரை சந்தித்து, மனு கொடுத்தோம். அரசாணையை திரும்ப பெறும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: