மணலி மண்டலத்தில் சிதிலமடைந்த நிலையில் உள்ள உடற்பயிற்சி கூடத்தை சீரமைத்ததாக பல லட்சம் முறைகேடு

திருவெற்றியூர்: மணலி மண்டலம் கொசப்பூரில் சிதிலமடைந்து காணப்படும் உடற்பயிற்சி கூடத்தை சீரமைக்காத அதிகாரிகள், சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, மக்கள் பயன்பாட்டில் உள்ளதாக தெரிவித்து இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அம்பலமாகி உள்ளது. இதன் மூலம் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மணலி மண்டலம், 17வது வார்டுக்கு உட்பட்ட  கொசப்பூரில், கடந்த 2012ம் ஆண்டு, கவுன்சிலர் நிதி ஒதுக்கீட்டில், 30 லட்சம் செலவில் நவீன உடற்பயிற்சி மையம் கட்டப்பட்டது. உடற்பயிற்சி சாதனங்கள், கழிவறை உள்ளிட்ட வசதிகளுடன் இயங்கி வந்த இந்த உடற்பயிற்சி மையத்தை அப்பகுதி இளைஞர்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட வர்தா புயலின்போது உடற்பயிற்சி மைய கட்டிடம் பலத்த சேதமடைந்தது. குறிப்பாக மேற்கூரை, ஜன்னல்கள் உடைந்தது. மேலும், மின் விளக்குகள், மின் விசிறிகளும் பழுதானது. இதனால், உடற்பயிற்சி கூடத்தை அப்பகுதி இளைஞர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, இந்த உடற்பயிற்சி மையத்தை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என இப்பகுதி இளைஞர்கள் மணலி மண்டல அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேல் உடற்பயிற்சி கூடம் பூட்டியே கிடக்கிறது.  

இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் கவிதா நாராயணன் கூறுகையில், ‘‘இப்பகுதி இளைஞர்கள் நலன் கருதி, 30 லட்சம் செலவில் இந்த நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. இதனை ஏராளமானோர் பயன்படுத்தி வந்தனர். தற்போது, சிதிலமடைந்த நிலையில் காணப்படும் இந்த உடற்பயிற்சி கூடத்தை சீரமைக்க வேண்டும், என மணலி மண்டல அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், இந்த உடற்பயிற்சி கூடத்தின் நிலை குறித்து விவரம் கேட்டபோது, அதிகாரிகள் அளித்த தகவல் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால், சிதிலமடைந்து காணப்படும் உடற்பயிற்சி கூடத்தை சீரமைத்து, நல்ல முறையில் பயன்பாட்டில் இருப்பதாக, தெரிவித்துள்ளனர். சிதிலமடைந்த உடற்பயிற்சி கூடத்தை சீரமைக்காமல், சீரமைப்பு பணி செய்திருப்பதாக தகவல் அளித்திருப்பது முறைகேடான செயல். இதன் மூலம், பல லட்சம் நிதி முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து, உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாழாகி வரும் உடற்பயிற்சி கூடத்தை சீரமைத்து, இளைஞர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்,’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: