×

புல்வாமா தீவிரவாத தாக்குதலை மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம் : பழிவாங்கப் போவதாக சிஆர்பிஎப் சூளுரை

புதுடெல்லி : ‘புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம். 40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு நிச்சயம் பழி வாங்குவோம்’ என சிஆர்பிஎப் சபதம் செய்துள்ளது. காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (சிஆர்பிஎப்) சேர்ந்த 2,500 வீரர்கள் 78 பேருந்துகளில் நகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் சென்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விடுமுறையை முடித்துவிட்டு பணிக்கு திரும்பியவர்கள். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் இந்த வாகனங்கள் நேற்று முன்தினம் மாலை 3.15 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது தற்கொலை படை தீவிரவாதி ஒருவன், வெடிபொருட்கள் நிரப்பிய வாகனத்தை வேகமாக ஓட்டி வந்து வீரர்கள் இருந்த பேருந்து மீது பயங்கரமாக மோதினான்.
இதில் பேருந்து சின்னாபின்னமாக வெடித்துச் சிதறியது. 100 கிலோ வெடிபொருளை காரில் ஏற்றி வந்த தீவிரவாதி இந்த தாக்குதலை நடத்தினான். இந்த பயங்கர தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இவர்களில் 37 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. சிலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளது. பலர் காயம் அடைந்து சிகிச்சை பெற்ற வருகின்றனர். வீர மரணம் அடைந்த வீரர்களின் உடல்கள் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பும் பணியை உள்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

இறந்த வீரர்களின் உடல்களுக்கு டெல்லியில் இருந்து வந்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக், சிஆர்பிஎப் இயக்குனர் பட்நகர், காஷ்மீர் டிஜிபி தில்பாஹ் சிங் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தேசியக்கொடி போர்த்தப்பட்ட ஒரு வீரரின் சவப்பெட்டியை ராஜ்நாத் சிங் தோளில் சுமந்து சென்று சிறப்பு விமானத்தில் ஏற்றினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘சிஆர்பிஎப் வீரர்களின் தியாகத்தை நாடு மறவாது. அவர்களின் தியாகம் வீண் போகாது’’ என்றார். இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  இச்சம்பவத்துக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் குறித்த சிஆர்பிஎப் டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த எங்கள் வீரர்களை வணங்குகிறோம். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக இருப்போம். இந்த கொடூர சம்பவத்தை நாங்கள் மறக்கவும் மாட்டோம்.

தாக்குதல் நடத்தியவர்களை மன்னிக்கவும் மாட்டோம். 40 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நிச்சயம் பழிவாங்குவோம். வீர மரணம் அடைந்த வீரர்களின் நினைவாக, சிஆர்பிஎப் படையின் அனைத்து முகாம்களிலும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. சிஆர்பிஎப் கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டது’ என கூறியுள்ளது. தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து  மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இந்த தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். தனது நாட்டிலிருந்து செயல்படும் தீவிரவாதிகளுக்கும், தீவிரவாத குழுக்களுக்கும் பாகிஸ்தான் ஆதரவளிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசார், அறிவிக்கப்பட்ட தீவிரவாதி. இந்த விஷயத்தில் சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்’ எனக் கூறியுள்ளது.

குற்றச்சாட்டை மறுத்தது பாகிஸ்தான்
புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த இந்தியா, தீவிரவாதிகளை ஆதரிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என கூறியிருந்தது. இந்நிலையில்  பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புல்வாமா தாக்குதல் மிகவும் கவலையளிக்கிறது. விசாரணையின்றி இந்த தாக்குதலை பாகிஸ்தானுடன் தொடர்பு படுத்துவதை நாங்கள் வன்மையாக நிராகரிக்கிறோம்’ என கூறியுள்ளது.


தீவிரவாத ஆதரவை அளிப்பதை பாக். நிறுத்த வேண்டும்: அமெரிக்கா

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் சாரா சாண்டர்ஸ் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘புல்வாமாவில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலை அமெரிக்கா வன்மையாக கண்டிக்கிறது. அனைத்து தீவிரவாத அமைப்புகளுக்கு அளித்து வரும் ஆதரவை பாகிஸ்தான் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா கேட்டுள்ளது. பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கும், இந்திய அரசுக்கும் அமெரிக்க தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது’’ என குறிப்பிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : extremist attack ,Pulwama ,CRPF , We will not forget, forgive,Pulwama terrorist attack
× RELATED மாஸ்கோ தீவிரவாத தாக்குதல்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்