தமிழகத்தில் காலியாக உள்ள 19 தொகுதியில் எம்.பி. தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு?

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 19 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம்  வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 5 கோடியே 91 லட்சத்து 23  ஆயிரத்து 197 வாக்காளர்கள் உள்ளனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க வசதியாக தமிழகம் முழுவதும் வருகிற 23 மற்றும் 24ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 67,600 வாக்குச்சாவடிகளில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்படும். மக்களவை தேர்தலை முன்னிட்டு, வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனராக உள்ள பிரதீப் ஜேக்கப், டாஸ்மாக் மாவட்ட வருவாய் அலுவலர் மணிகண்டன் ஆகியோர் இணை தலைமை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் காலக்கெடு நேற்றுடன் (15ம் தேதி) முடிவடைந்து விட்டது. தமிழகத்தில் எடுத்த நடவடிக்கை பற்றி வருகிற 22ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

தமிழகத்தில் நடைபெறும் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு உள்ளிட்ட தேர்வு விவரங்களை தெரிவிக்கும்படி தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. இதுபற்றிய தகவல்கள் தமிழக அரசிடம் பெற்று உடனடியாக அனுப்பப்படும். ஒசூர் தொகுதி இன்னும் காலியாக உள்ளதாக தமிழக அரசு அறிவிக்கவில்லை. தற்போது தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளில் திருப்பரங்குன்றம் தொகுதியில் வழக்கு நடந்து வருகிறது. மீதமுள்ள 19 தொகுதிகளிலும் ஏப்ரல் இறுதிக்குள் இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதனால், மக்களவை தேர்தலுடன் இந்த 19 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு இன்று வரை 1,31,931 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 14,221 பேர் ஆகும். இவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

தமிழகத்தில் மொத்தம் 67,664 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 4,102ம், குறைந்தபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 587ம் உள்ளது. அனைவரும் ஓட்டளிக்க வசதியாக கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டுமா என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை கூட வாய்ப்புள்ளது. ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்த வேண்டும் அல்லது முதல்கட்ட தேர்தலை தமிழகத்தில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதே? அதுகுறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் விரைவில் தமிழகம் வர உள்ளார். அதற்கான தேதி  இன்னும் முடிவாகவில்லை. அவர் வரும்போது, தமிழகத்தில் உள்ள உயர் போலீஸ்  அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட எஸ்பிக்களுடனும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனும் அவர் தேர்தல் குறித்து ஆலோசனை  நடத்துவார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: