சிலை கடத்தல் வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்காத கிரண்ராவ் முன்ஜாமீனை ரத்து செய்ய முடிவு

சென்னை :  சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள்  நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்துள்ள சிலைகளை பாதுகாப்பாக வைக்க இதுவரை உரிய இடம் கிடைக்கவில்லை. அதனால் சிலைகள் பாதிப்படைய நேரிடும் என ரன்வீர்ஷா தரப்பு வக்கீல் நீதிபதிகளிடம் தெரிவித்தார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியன், எல்லா மியூசியங்களிலும்  ஆய்வு செய்தோம். இந்த சிலைகளை வைக்க இடம் இல்லை. அரசிடம் வேறு ஏற்பாடு உள்ளதா என்று கேட்டுச் சொல்கிறேன் என்றார். மத்திய அரசு சார்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன் ஆஜராகி, தொல்லியல் துறையில் இந்த சிலைகளை பாதுகாக்க இடம் இல்லை. என்றார்.இதை ஏற்காத நீதிபதிகள், தமிழக அரசு உரிய பாதுகாப்பான இடத்தை ஒரு வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதை தொடர்ந்து சிலைகள் பதுக்கல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வக்கீல் ஆஜராகி, சிலைகளை பதுக்கிய வழக்கில் முன்ஜாமீனில் உள்ள கிரண் ராவ் மற்றும் தீனதயாள் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும், காவல் அதிகாரிகளை மிரட்டுவதாகவும் அவர்களின் முன்ஜாமீனை ரத்து செய்ய மனுதாக்கல் செய்ய இருப்பதாகவும்  நீதிபதிகளிடம் தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதிகள், முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனுதாக்கல் செய்தால் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தனர். அப்போது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்காக நியமிக்கப்பட்ட 104 போலீஸ்  அதிகாரிகளில் 15 பேர் இப்பிரிவில்  சேர விருப்பமில்லை என தெரிவித்துள்ளனர்.  அவர்களுக்கு மாற்றாக,  விருப்பமுள்ள நபர்களை சிறப்பு அதிகாரி பரிந்துரைக்க உத்தரவிட வேண்டும் என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் சேர விருப்பமில்லாத காவல் துறை அதிகாரிகள், சிறப்பு அதிகாரி முன் ஆஜராகி கலந்தாலோசிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: