ஜெயலலிதாவுக்கு கடைசி நேரத்தில் தரப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது : ஆறுமுகசாமி ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு

சென்னை : ஜெயலலிதாவுக்கு அப்போலோ மருத்துவமனையில் வழங்கப்பட்ட கடைசிநேர சிகிச்சை குறித்து விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என்று ஆறுமுகசாமி ஆணையம் உயர் நீதிமன்றத்தில் பதில் மனுதாக்கல் செய்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்நிலையில், அப்போலோ மருத்துவமனை சார்பில் சட்டப்பிரிவு மேலாளர் மோகன்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில், எங்கள் மருத்துவமனை மருத்துவர்களிடம் ஆணையம் தேவையற்ற கேள்விகளை எழுப்பி, மருத்துவமனைக்கு மக்களிடம் உள்ள நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே, ஆறுமுகசாமி ஆணையம் அமைக்க அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக 21 துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் குழுவை அமைக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர்  மனுவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் பதில் தருமாறு உத்தரவிட்டனர். இந்த வழக்கில் ஆறுமுகசாமி ஆணையம் நேற்று அளித்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

ஆணையத்தின் விசாரணை தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் விசாரணை அறிக்கையை அரசிடம் ஆணையம் தாக்கல் செய்யும். அப்போலோ மருத்துவமனை எங்களிடம் அளித்த பட்டியலில் இருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு மட்டுமே சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட்டது.  வி.கே.சசிகலா தரப்பில் குறுக்கு விசாரணை செய்தபோதும் நியாயமான வாய்ப்புகள் அப்போலோ மருத்துவமனை தரப்புக்கு வழங்கப்பட்டது. ஜெயலலிதாவின் மரணம் மட்டுமின்றி அவருக்கு  கடைசி நிமிடம் வரை அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள்  குறித்து விசாரணை நடத்தவும்  ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளது. விசாரணையை தடுக்கும் நோக்கத்துடனேயே அப்போலோ மருத்துவமனை இந்த வழக்கை தொடர்ந்துள்ளது. ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2016 செப்டம்பர் 22 முதல் அவர் மரணம் அடைந்த  நாள் வரை அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்த வேண்டியது ஆணையத்தின் கடமை. ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக்கூறி தமிழகம் முழுவதும் 302 பேர் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். இதில் 30 பேர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 56 மருத்துவர்கள், 22 மருத்துவ ஊழியர்கள் என மொத்தம் 147 பேரிடம் சாட்சியம் பெறப்பட்டுள்ளது.

அப்போலோ  மருத்துவமனை மருத்துவர்கள்  மற்றும் ஊழியர்களிடம் விசாரித்தபோது அவர்களுக்கு சட்டரீதியாக நியாயமான வாய்ப்புகள் வழங்கப்பட்டது. ஆணையத்தில் மருத்துவர்கள் அளித்த மருத்துவ வார்த்தைகள் தொடர்பான சாட்சியங்களில் சில தட்டச்சு பிழை உள்ளதே தவிர, தவறாக குறிப்பிடப்படவில்லை. இந்த ஆணையத்தை எதிர்த்து ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனுக்கள் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த பதில் மனு தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் பதிலளிக்க கால அவகாசம் வழங்கி விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் அவகாசம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க, 2017 செப்டம்பர் 25ல் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அரசு கொடுத்த மூன்று மாத கால அவகாசம் மேலும் ஆறு மாதம் நீட்டிப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து, 2வது முறை நான்கு மாதமும், 3வது முறை 4 மாதமும் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், அப்போலோ உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் காரணமாக வரும் பிப்ரவரி 24ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க முடியாத சூழல் இருப்பதால் வரும் ஜூன் 24ம் தேதி வரை ஆணையத்திற்கு கால நீட்டிப்பு வழங்குமாறு தமிழக அரசிற்கு விசாரணை ஆணையம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: