×

விழுப்புரம் அருகே பரபரப்பு: அரசு பள்ளியில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்: ஆசிரியருக்கு தர்ம அடிகொடுத்த பெற்றோர்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிக்கு தாலி கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியரை சரமாரியாக தாக்கினர். விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் 500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் சக மாணவியான ஒருவரை காதலித்து வந்துள்ளான். ஆனால் அந்த மாணவி காதலை ஏற்க மறுத்தார். இதனால் மாணவன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். இதனிடையே நேற்று முன்தினம் பிற்பகல் உணவு இடைவேளையின்போது மீண்டும் காதலை ஏற்றுக்கொள்ளும்படி வலியுறுத்தியுள்ளான். ஆனால் மாணவி காதலை ஏற்க மறுத்து வகுப்பறைக்கு சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன் வெளியில் சென்று மஞ்சள் கயிறு (தாலி) வாங்கி வந்து வகுப்புக்குள் சென்று மாணவியின் கழுத்தில் கட்டியுள்ளார். இச்சம்பவம் பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாலை பள்ளிவிட்டதும் அழுதுகொண்டே வீட்டுக்கு சென்று மாணவி பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள் நேற்று பிற்பகல் மாம்பழப்பட்டு அரசு பள்ளிக்கு வந்து ஆசிரியர்களை கண்டித்தும், மாணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாணவியின் தாலியை அறுத்து எறிந்தனர். மேலும் தாலிகட்டும்போது வகுப்பறையில் இருந்த ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெற்றோர் அவரை சரமாரியாக தாக்கினர்.

 தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலக அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தை காவல்துறைக்கு கொண்டுசென்றால் படிப்பு பாதிக்கும் என்பதால் கல்வித்துறை அதிகாரிகளே நடவடிக்கை எடுத்தனர். அடுத்த மாதம் தேர்வு நெருங்குவதால் மாணவி மட்டும் பள்ளிக்கு வர வேண்டும் என்றும், தாலிகட்டிய மாணவன் பள்ளிக்கு வரக்கூடாது என்றும் அதிகாரிகள் உத்தரவிட்டனர். நேரடியாக தேர்வுக்கு வந்து தேர்வெழுதிக்கொள்ளலாம், மற்றபடி பள்ளிக்கு வரக்கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Student ,government school , Villupuram, Government School, Student, Thali, Student, Teacher
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...