16 ஆண்டுகளாக அகழாய்வு அறிக்கை தாக்கல் செய்யவில்லை இந்தியாவில்தான் தமிழகம் இருக்கிறதா? மத்திய தொல்லியல்துறைக்கு நீதிபதிகள் கேள்வி

மதுரை: ஆதிச்சநல்லூரில் அகழாய்வு முடிந்து 16 ஆண்டுகள் ஆகியும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. மத்திய தொல்லியல்துறையின் நடவடிக்கையை பார்க்கும்போது, தமிழகம், இந்தியாவில்தான் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்த தொல்லியல் துறைக்கு உத்தரவிடக்கோரி, தூத்துக்குடியை சேர்ந்த காமராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். இதேபோல், தூத்துக்குடி, சிவகளைபரம்பு பகுதியில் அகழாய்வு நடத்தக்கோரியும் தனி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன்,   சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிடுகையில், ‘‘தமிழகத்தை மத்திய தொல்லியல்துறை புறக்கணிக்கிறது. குஜராத்தில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு ரூ.1,000 கோடி ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் அகழாய்வு பணிக்கு உரிய நிதி ஒதுக்கவில்லை’’ என்றார்.இதனையடுத்து நீதிபதிகள், ‘‘ஆதிச்சநல்லூரில் அகழாய்வு முடிந்து 16 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? . தமிழகத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு அகழாய்வுக்கும் நீதிமன்றத்தை அணுக வேண்டி உள்ளது.  ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற தொல்லியல் அலுவலர் சத்தியமூர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும்  சத்தியமூர்த்திக்கு மத்திய அரசு எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை. ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால பொருட்களின் வயதை கண்டறியும் சோதனைக்காக புளோரிடாவுக்கு அனுப்பவில்லை.

இவற்றை பார்க்கும்போது தமிழகத்தின் பாரம்பரியங்களை வெளிப்படுத்துவதில், மத்திய அரசு ஆர்வம் இல்லாமல் இருப்பது போல் தெரிகிறது. மத்திய தொல்லியல்துறையின் நடவடிக்கையை பார்க்கும்போது தமிழகம் இந்தியாவில்தான் இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. மத்திய தொல்லியல்துறையின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது’’ என்று தெரிவித்தனர். இதனையடுத்து, மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ‘‘அகழாய்வு மேற்கொள்வதில் மத்திய அரசு பாகுபாடு பார்க்கவில்லை. தொல்லியல்துறை உயர் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்படும்’’ என்று பதில் அளித்தார். இதனையடுத்து, விசாரணையை பிப். 18ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன?

இதேபோல், மதுரை சமணர் பழங்கால மையத்தின் செயலாளர் ஆனந்தராஜ் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் 450க்கும் அதிகமாக சமணர் அடையாள சின்னங்கள் உள்ளன. மதுரையில் மட்டும் 26 சமணர் குகைகள், 140 கல்படுகைகள் உள்ளன. இந்த குகை, கல்படுகைகளில் வட்டெழுத்துக்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன. தமிழ் மொழி 2 ஆயிரம் ஆண்டு பழமையானது என்பதற்கு சான்றாக இருக்கும் சமணர் குகைகளையும், படுகைகளையும் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை.  எனவே, மதுரையில் உள்ள சமணர் அடையாளங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கவும், யானைமலை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சமணர் அடையாள சின்னங்களை பாதுகாக்க போதிய பணியாளர்களை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவையும் நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் விசாரித்து, ‘‘மதுரையில் உள்ள சமணர் அடையாளங்கள் அனைத்தும் எப்போது பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்படும்? பாரம்பரிய நினைவுச்சின்னங்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? பாதுகாப்புக்காக எத்தனை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பாக மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பு பொறியாளர் மார்ச் 4ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: