19 நாட்களாக சுற்றி திரிந்த சின்னதம்பி யானை பிடிபட்டது: மயக்க ஊசி போட்டு டாப்சிலிப் முகாமுக்கு கொண்டு சென்றனர்

உடுமலை: உடுமலையில் 19 நாட்களாக வலம்வந்த சின்னதம்பி யானை நேற்று மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. இந்த யானை, டாப்சிலிப் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.  கோவை மாவட்டம் சின்னதடாகம் பகுதியில் சின்னதம்பி காட்டு யானை சுற்றி வந்தது. இந்த யாைனயை கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் டாப்சிலிப் வரகளியாறு வனத்தில் விடுவிக்கப்பட்டது. சின்னதம்பி கழுத்தில் ரேடியோ காலர் கருவி  பொருத்தப்பட்டது. இதன்மூலம் அதன் நடமாட்டம் வனத்துறை அலுவலகத்தில் இருந்து கணினி மூலம் கண்காணிக்கப்பட்டது. ஆனால், திடீரென 28ம் தேதி வனத்தில் இருந்து வெளியேறிய சின்னதம்பி, ஊருக்குள் புகுந்தது. பொள்ளாச்சி அருகே கோட்டூர், அங்கலகுறிச்சி, தீபாலபட்டி வழியாக உடுமலைக்கு வந்தது. 10 நாட்களாக, மடத்துக்குளம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள சர்க்கரை ஆலை பின்புறம் முகாமிட்டது.

பின்னர், மடத்துக்குளத்தில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ள கண்ணாடிபுத்தூர் வடக்கு பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் சின்னதம்பி முகாமிட்டது. பயிர்களை தின்று நாசம் செய்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

இதையடுத்து, சின்னதம்பியை பிடிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கில், சின்னதம்பி யானையை பாதுகாப்புடன் பிடித்து, வனத்துறை முகாமுக்கு கொண்டு செல்லலாம் என உயர்நீதிமன்றம் கடந்த 13ம்தேதி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சின்னதம்பியை பிடிக்க திருப்பூர் மாவட்ட வன அலுவலர் திலீப் தலைமையில் வனத்துறையினர்  களத்தில் இறங்கினர். 100க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள், யானை நின்ற பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர். சத்தியமங்கலம் வனத்துறை மருத்துவர் அசோகன், மயக்க ஊசியுடன் தயார் நிலையில் இருந்தார். மேலும் 2 ஜேசிபிக்கள், கும்கிகள் கலீம், சுயம்பு தயாராக இருந்தன. யானை நிற்கும் பகுதிக்கு சர்க்கார் கண்ணாடிபுத்தூர் வாய்க்கால் வழியாக செல்ல வேண்டும். இதனால் வாய்க்கால் கரையோரம் லாரி செல்லும் வகையில், மேடு பள்ளங்கள் ஜேசிபி மூலம் சரி செய்யப்பட்டது.  

இந்நிலையில், கரும்புக்காட்டில் நின்ற யானையை வெளியில் கொண்டு வர, அதன் அருகே பலாப்பழ துண்டுகளை போட்டனர். நேற்று அதிகாலை 5 மணிக்கு பழங்களை சாப்பிட யானை வெளியே வந்தது. அப்போது, மருத்துவர் அசோகன் துப்பாக்கி மூலம் முதலில் மயக்க ஊசியை செலுத்தினார். ஆனால் சின்னதம்பிக்கு மயக்கம் வரவில்லை. இதையடுத்து 2-வது ஊசியை செலுத்தினார். அது குறி தவறியது. 3-வது ஊசியும்  பாயவில்லை. 4-வதாக செலுத்திய ஊசி, யானையின் வலது தொடையில் குத்தியது. இதனை தொடர்ந்து மயக்க நிலையில் நின்ற சின்னதம்பிக்கு பாதுகாப்பாக கும்கிகள் கலீம், சுயம்பு ஆகிய 2 யானைகளும் இருபுறமும் நின்று கொண்டன.

 இதன்பின் வாழைத்தோப்பு ஒன்றில் ஜேசிபி இயந்திரம் மூலம் வழி அமைத்தனர். சின்னதம்பியின் கால்களில் வனத்துறையினர் கயிறு கட்டினர். பின்னர் மாலை 3.15 மணி அளவில் சின்னதம்பியை கும்கி சுயம்பு பின்னால் இருந்து தள்ளி லாரியில் ஏற்றியது. முன்னதாக சுமார் 30 நிமிடம் சின்னதம்பி லாரியில் ஏற மறுத்து அடம் பிடித்தது. இதன்பின்னர் சின்னதம்பி, டாப்சிலிப் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டது. சின்னதம்பி பிடிபட்டதால், கடந்த 28ம்தேதியில் இருந்து நேற்று வரை 19 நாட்கள் நிலவிய ‘யானை பரபரப்பு’ முடிவுக்கு வந்தது.

வனத்துறைக்கு  நன்றி தெரிவித்த மூதாட்டி

 உடுமலை பகுதியில் கரும்புக்காடு, நெல் வயல், வாழைத்தோட்டம், தென்னந்தோப்புகளில் சின்னதம்பி உலா வந்ததால் பயிர்கள் சேதமடைந்தன. கடந்த 2 ஆண்டுகளுக்குப்பின் அமராவதி அணை நிரம்பியதால், இந்த முறைதான் விவசாயிகள் அதிகளவில் கரும்பு, நெல் பயிரிட்டனர். இது சின்னதம்பியால் பாதிக்கப்பட்டதால் வேதனை அடைந்தனர். தற்போது யானை பிடிபட்டதால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். விவசாயியான சின்னப்பொன்னு (65) என்பவர், புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசனின் காலில் விழுந்து கண்ணீர் மல்க நன்றி கூறினார். அப்போது அவர், 3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கரும்பு பயிரிட்டிருந்தேன். சின்னதம்பி அவற்றில் பெரும்பாலானவற்றை அழித்து விட்டது. முழு தோட்டத்தையும் நாசம் செய்யும் முன்பாக யானையை பிடித்து விட்டீர்கள். சேதமான கரும்புக்கு நிவாரண உதவி பெற்றுத்தர வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: