×

அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

செம்பட்டி: தமிழகத்தில் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வாக்குச்சாவடி திமுக முகவர் கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் 18 எம்எல்ஏக்களின் பதவியை, சபாநாயகர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பறித்தார். அந்த தொகுதி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். ஓசூர் தொகுதி சட்டசபையை காலியாக உள்ளதாக அறிவிக்க வேண்டும். ஆனால் சபாநாயகர் இன்னும் அறிவிக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தல் வருகிறதா அல்லது மீண்டும் 234 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் வர உள்ளதா என்பது தெரியவில்லை. அதிமுக அரசு மைனாரிட்டி ஆட்சியாக நடந்து வருகிறது. உடனடியாக அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டிய சூழல் உள்ளது. பொதுமக்களே அதிகம் எதிர்பார்த்து உள்ளனர்.

அதிமுக ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பினாமிகளுக்கு ஒப்பந்தங்களை கொடுக்கிறார். குட்கா ஊழல், திட்டப்பணிகளுக்கு லஞ்சம் என சகட்டுமேனிக்கு ஊழல் நடக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி கொடநாட்டில் கொலை நடந்தது. அதை மறைப்பதற்காக 5 கொலைகள் நடந்தன. ஜெயலலிதாவிடம் பணிவாக இருந்தவர், சசிகலாவிடம் தவழ்ந்து சென்று பதவியை பிடித்தவர் முதல்வர். விரைவில் சிறைக்கு செல்ல உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார். பள்ளப்பட்டியில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தி.மு.க.  தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து பேசியதாவது: தமிழகம் முழுவதும் 90 சதவீதத்திற்கு மேல் கூட்டங்களை நடத்தி உள்ளோம். குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டுமே நான் செல்ல முடிந்தது.

கடந்த ஜனவரி 3ம் தேதி இந்த பயணத்தை தொடங்கினோம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியாவில் மட்டுமல்ல; வேறு எங்குமே இது மாதிரியான கிராம சபை கூட்டத்தை யாருமே நடத்தியது கிடையாது. மக்களுக்கு பயன்படக்கூடிய, பயனளிக்கக்கூடிய வகையில் இதுபோன்ற கூட்டத்தை தி.மு.க. நடத்தி வருகிறது. மத்தியில் மோடி தலைமையிலும், தமிழகத்தில் அதிமுக தலைமையிலும் ஒரு கொடுமையான ஆட்சி நடக்கிறது. 5 வருட ஆட்சி முடிய போகும் நிலையில், 2 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம் என மாறி, மாறி அறிவிக்கின்றனர். இது ஓட்டுகளை பெறுவதற்காக வெளியிடப்படும் அறிவிப்புகள்தான். தொழிற்சாலைகளை தொடங்கவில்லை. படித்த பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கவில்லை.  

பெண்களுக்காக எத்தனையோ சிறப்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது தி.மு.க. ஆட்சியில்தான். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, ஆரம்ப பள்ளிக்கூடங்களில் பெண்களையே ஆசிரியர்களாக நியமிப்பது போன்ற திட்டங்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான சுழல் நிதி போன்ற அருமையான திட்டங்களை கொண்டு வந்தோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னரே விவசாயிகளுக்கு கடன், இலவச மின்சாரம் போன்ற உதவிகளை வழங்கினோம். கிராமங்களில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற, உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டியது அவசிய தேவையாகும். திமுக ஆட்சிக்கு வந்ததும், முதல் வேலையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், நிலக்கோட்டை ஒன்றியத்தின் பல்வேறு கிராம ஊராட்சிகளை சேர்ந்த 25 பேருக்கும் மேற்பட்ட பெண்கள், குடிநீர், கழிவுநீர் கால்வாய், திருமண மண்டபம் வசதிகள் கோரி மனு அளித்தனர். கூட்டத்தில், மாநில துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர்கள் ஐ.பி.செந்தில்குமார், அர.சக்கரபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உயிரிழந்த 40 வீரர்களுக்கு 2 நிமிட மவுன அஞ்சலி
ஊராட்சி சபை கூட்டம் தொடங்குவதற்கு முன்பு காஷ்மீரில் தற்கொலை படை தாக்கியதில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்பின், மு.க.ஸ்டாலின் பேசுகையில், ``தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 40 பேர் பலியானதற்கு, அஞ்சலி செலுத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். குறிப்பாக, தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேரை இழந்த குடும்பத்துக்கு, இந்த ஊராட்சி சபை சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்று குறிப்பிட்டார். அப்போது, அனைவருமே ஒருவித சோகத்துடன் காணப்பட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,speech ,MK Stalin , AIADMK, MK Stalin
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...