×

ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு நிதியமைச்சர் பொறுப்பை மீண்டும் ஏற்றார் ஜெட்லி

புதுடெல்லி:  அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய அருண் ஜெட்லி, மத்திய நிதியமைச்சராக நேற்று மீண்டும் பொறுப்பேற்றார். மத்திய நிதியமைச்சராக பதவி வகித்து வந்த அருண் ஜெட்லிக்கு கடந்தாண்டு மே 14ம் தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவர் வகித்து வந்த பதவி, கடந்தாண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 23ம் தேதி வரை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், ஜெட்லிக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், சிகிச்சைக்காக கடந்த மாதம் 13ம் தேதி அமெரிக்கா சென்றார். இதனால், அவர் வகித்து வந்த நிதியமைச்சர் பொறுப்பு, கோயலிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. அவர் இந்த மாதம் 1ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்நிலையில், அமெரிக்கா சென்ற ஜெட்லிக்கு கடந்த மாதம் 22ம் தேதி இடது காலில் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த 9ம் தேதி அவர் நாடு திரும்பினார். இதையடுத்து, ஒரு மாத இடைவேளைக்கு பிறகு அவருக்கு நிதியமைச்சர் பொறுப்பு மீண்டும் அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் பரிந்துரைப்படி, ஜெட்லிக்கு இந்த துறையை  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒதுக்கீடு செய்தார். இதைத் தொடர்ந்து, டெல்லி வடக்கு பிளாக்கில் உள்ள நிதியமைச்சக அலுவலகத்துக்கு வந்து ஜெட்லி தனது பொறுப்பை ஏற்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : break ,Jaitley ,Finance Minister , The Finance Minister is responsible, jetley
× RELATED அருண் ஜெட்லி அரங்கம் தயார்: டெல்லி – ஐதராபாத் இன்று பலப்பரீட்சை