×

தமிழக அரசின் தொடர் வலியுறுத்தலால் பட்டாசு விற்பனை வழக்கை 20ம் தேதி விசாரிக்க முடிவு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: தமிழக அரசு தொடர்ந்து 4 முறை விடுத்த கோரிக்கையை ஏற்று, பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை கட்டுப்பாடுகள் தொடர்பான வழக்கை வரும் 20ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பட்டாசு வெடிப் பது குறித்து  உச்ச நீதிமன்றம், கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி அதிரடி தீர்ப்பு வழங்கியது. தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கும், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் போன்றவற்றுக்கும் பட்டாசு வெடிக்க நேரத்தை நிர்ணயம் செய்தது. மேலும், பேரியம் மூலப்பொருள் இல்லாமல் பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இது, பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தமிழக அரசு சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் தொடர்பாக, கடந்த வாரம் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வினோத் கன்னா, உச்ச நீதிமன்றத்தில் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அதில், “பட்டாசு தொடர்பான ஒட்டுமொத்த வழக்கையும் வரும் மார்ச் 1ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இது மிக நீண்ட காலமாகும். ஏற்கனவே, தமிழகத்தில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர், விற்பனையாளர்கள் நீதிமன்ற உத்தரவால் பாதித்துள்ளனர். அதனால், அவர்களின் நலனை அடிப்படையாக கொண்டு இந்த விவகாரத்தில் தமிழக அரசின் மனுவை அவசர வழக்காக எடுத்து விரைந்து விசாரித்து இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என கோரினார்.

இதையடுத்து, விசாரணை தேதியை விரைவில் அறிவிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.  நீதிபதிகள் ஏகே.சிக்ரி, அப்துல் நசீர் ஆகியோர் இந்த வழக்கு தொடர்பாக நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘பட்டாசு தொடர்பான தமிழக அரசின் மனு உட்பட அனைத்து வழக்குகளும் பிப்ரவரி 20ம் தேதி விசாரணை நடத்தப்படும்’ என தெரிவித்தனர். இதில், இந்த வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி தமிழக அரசு தரப்பில் மட்டும் 4 முறை கோரிக்கை வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,crackdown ,government ,Tamil Nadu , Tamil Nadu Government, Crackdown on sale, Supreme Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...