தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 50 கி.மீ தொலைவிலும் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் உணவகங்கள் அமைக்கக்கோரி வழக்கு: கூடுதல் தலைமை செயலாளர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 50 கி.மீ. தொலைவுக்கும், அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் உணவகங்கள் அமைக்கக்கோரிய வழக்கில், கூடுதல் தலைமை செயலாளர் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. ஐகோர்ட் மதுரை கிளையில் வக்கீல் ஒருவர் தாக்கல் செய்த பொதுநல மனு: பயணிகள், ஓட்டுனர், நடத்துனர் ஆகியோர் நலன் கருதி, தமிழகத்தில் 31 உணவகங்களை அரசு போக்குவரத்துக்கழகம் 2017ல் அங்கீகரித்துள்ளது. இந்த உணவகங்களில் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு என தனி அறை ஒதுக்கப்பட்டு உணவு, குடிநீர் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகிறது. தினமும் வருவதற்கு பணமும் கொடுக்கின்றனர். ஆனால் இந்த உணவகங்களில் உணவுகள் தரமின்றி, கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.

ஆனால் தனியார் பஸ்கள் தரமான உணவகங்களில் பேருந்துகளை நிறுத்துகின்றன. வெளிமாநிலங்களில் போக்குவரத்துக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட உணவகங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு உயர்தரத்தில் உள்ளது. ரயில்வேயில் பயணிகளுக்கு குறைந்த விலையில் தரமான உணவு வழங்கப்படுகிறது. ரயிலில் வழங்குவதுபோல் நிரந்தர விலையில் தரமான உணவு, ஆவின் பாலகம், தொலைபேசி இணைப்பு, முதலுதவி மையம், சி.சி.டி.வி. கேமரா, சுத்தமான கழிப்பறை வசதி ஏற்படுத்தி அனைத்து அரசு மற்றும் தனியார் ஆம்னி பஸ்களை நிறுத்த வேண்டும்.

 அரசு பஸ்களில் நெடுந்தூர பயணிகளுக்கு காலை 7.30 மணிக்கும், பகல் 1 மணிக்கும், இரவு 7.30 மணிக்கும் உணவு வழங்கும் வகையில், தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 50 கி.மீ. தொலைவிலும், போக்குவரத்துக்கழகம் சொந்தமாக உணவகங்களை அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து தமிழக போக்குவரத்துக்கழக கூடுதல் தலைமைச்செயலாளர், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: