சிறை நிரப்புதல், உண்ணாவிரதம், கருப்புக்கொடி கிரண்பேடிக்கு எதிராக தொடர் போராட்டம்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து கவர்னர் மாளிகை முன் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நடத்தும் காலவரையற்ற தர்ணா நேற்று 3வது  நாளாக தொடர்ந்தது.

மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து முட்டுக்கட்டை  போட்டு வருவதாக கூறி  நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள்  13ம் தேதியில் இருந்து கவர்னர் மாளிகை முன் தர்ணா போராட்டத்தை தொடங்கினர். இவர்களை கண்டுகொள்ளாமல் நேற்றுமுன்தினம் ராஜ்நிவாசில் இருந்து கவர்னர்  கிரண்பேடி வெளியேறி, சென்னை சென்றார். பின்னர், அங்கிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். முதல்வர், அமைச்சர்களை புறக்கணித்து வெளியேறியது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  இந்தநிலையில், நேற்று 3-வது நாளாக  ேபாராட்டம் நீடித்தது. போராட்டம் நடைபெறும்  இடத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், மேலிட பொறுப்பாளருமான சஞ்சய்  தத் நேற்று மதியம் 12.30 மணியளவில் வருகை தந்தார். அப்போது, மாநில அரசு கொண்டு வரும் மக்கள் பணிகள், வளர்ச்சி திட்டங்களை  கவர்னர் கிரண்பேடி திட்டமிட்டு தடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். இதுபற்றி சஞ்சய் தத் கூறியதாவது:

  முதல்வர்,  அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜனநாயகத்தை காக்கும் இந்த போராட்டம் தொடர வேண்டும்.  மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை கிரண்பேடி முடக்கி வருகிறார்.  

உடனடியாக ஹெல்மெட் சட்டத்தை கொண்டு வந்து, அபராதம் விதித்து  அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று செயல்படுகிறார். உண்மையில் மக்கள் மீதான அக்கறை கிரண்பேடிக்கு இல்லை.

மோடியும் பேடியும், ரங்கசாமியும் புதுச்சேரி மக்களுக்கு  எதிரானவர்கள்.  இதனை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி பிரதமர் ஆவது உறுதி. அதன்பிறகு மக்கள் விரோத கிரண்பேடி டிஸ்மிஸ் செய்யப்படுவார்.  இவ்வாறு அவர்  கூறினார். இதனிடையே, போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது குறித்து முதல்வர் நாராயணசாமி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி தலைவர்களுடன் மாலையில் ஆலோசனை நடத்தினார். இதுபற்றி நாராயணசாமி கூறுகையில், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி சார்பில் உண்ணாவிரதம், சிறை நிரப்பும்  போராட்டம் என போராட்டம் தீவிரப்படுத்தப்படவுள்ளது.

நாளை (இன்று) மாலை 12 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். நாளை (17ம் தேதி) 30 தொகுதிகளில்  கருப்பு கொடி ஏற்றப்படும். 18ம் தேதி கிரண்பேடியை கண்டித்து குடியரசு  தலைவர், பிரதமர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடக்கவுள்ளது. 19ம் தேதி மாசிமக  திருவிழாவை யொட்டி போராட்டம் கிடையாது. 20ம் தேதி 12 மையங்களில்  சிறைநிரப்பும் போராட்டம் நடைபெறவுள்ளது. 21ம்தேதி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது’’ என்று அறிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: