×

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் இன்று சென்னை திரும்புகிறார்: தேமுதிகவினர் உற்சாக வரவேற்புக்கு ஏற்பாடு

சென்னை: அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்புகிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு குரல் வளமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவில் ஜூலை 7ம் தேதி முதல் ஆகஸ்ட் 20ம் தேதி வரை முதல்கட்டமாக சிகிச்சை பெற்றார். தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக கடந்த டிசம்பர் 18ம் தேதி விஜயகாந்த் அமெரிக்கா சென்றார். அவரது மனைவி பிரேமலதாவும் உடன் சென்றார். இடையில் அவரது உடல்நிலை குறித்து வதந்திகளும் பரவியது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு தேமுதிகவினரை விஜயகாந்த் உற்சாகப்படுத்தி வந்தார். கடைசியாக தனது திருமண நாளில் பிரேமலதாவுடன் இருக்கும் படம் வெளியானது.

அதில் விஜயகாந்த் உற்சாகமாக காட்சியளித்தார். தற்போது, அவரது உடல்நிலை சீரானதை தொடர்ந்து அவர் இன்று அதிகாலையில் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்புகிறார். சென்னை வரும் அவர் உடனடியாக வீட்டுக்கு புறப்பட்டு செல்லவில்லை. விமான நிலையத்தில் உள்ள விஐபிக்கள் தங்கும் அறையில் தங்குகிறார். இதற்காக அவர் மத்திய, மாநில அரசுகளிடம் சிறப்பு அனுமதி வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. காலையில் அவர் வீடு திரும்ப திட்டமிட்டுள்ளார். அப்போது அவருக்கு தேமுதிகவினர் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, நாடாளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது. விஜயகாந்த் குறித்து மக்களிடம் அனுதாபம் ஏற்படுத்தவும் இதுபோன்ற வரவேற்புக்கு தேமுதிகவினர் ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தொண்டர்கள் மத்தியில் அவர் உரையாற்றவும் திட்டமிட்டுள்ளார். வீட்டில் ஓய்வு எடுக்கும் விஜயகாந்த், ஓரிரு நாளில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் உடனடியாக வேட்பாளர் பெயரை அறிவிக்கவும் தேமுதிக தயாராக இருந்து வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vijayakanth ,treatment ,Chennai ,United States ,reception ,Dhamtiviran , USA, Vijayakanth, Chennai, dmdk
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...