டிரான்ஸ்பர், கூடுதல் சீட் ஒதுக்கீட்டில் கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் பல கோடி முறைகேடு: முன்தேதியிட்டு கையெழுத்தாகும் ஆவணங்கள்

சிறப்பு செய்தி

கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் ஆசிரியர் பணியிட மாறுதல், கல்லூரிகளில் கூடுதல் சீட் ஒதுக்கீடு செய்வதில் பல கோடி முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  தமிழகத்தில் கல்லூரிக்கல்வி இயக்ககத்தின் கீழ் 91 அரசுக் கலைக்கல்லூரிகள், 7 கல்வியியல் கல்லூரிகள், 40 பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகள், 3 உடற்கல்வி கல்லூரிகள், 162 அரசு உதவிெபறும் கல்லூரிகள் உள்ளன. இதுதவிர 1,243 தனியார் கல்லூரிகள் சேர்த்து கல்லூரிக்கல்வி இயக்கத்தின்கீழ் தமிழகத்தில் 1,543 கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றில் 138 அரசுக் கல்லூரிகளில் 11 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், அரசுக்கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் நியமனம், பணியிட மாறுதல், மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடங்களை அதிகரித்தல், ஆசிரியர்களுக்கான சம்பளப் பட்டுவாடா உள்பட பல்வேறு பணிகளை கல்லூரிக்கல்வி இயக்ககம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் அரசுக்கல்லூரி ஆசிரியர் பணியிட மாறுதல், கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதுதொடர்பாக, ஆசிரியர்கள் தரப்பில் கூறியதாவது: அரசுக்கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் பெரும்பாலானோர் குழந்தைகளின் கல்விக்காக சொந்த ஊருக்கு அருகில் உள்ள மாநகரத்தில் இயங்கும் கல்லூரியில் பணியாற்றவே விரும்புகிறார்கள். தமிழகத்தில் எந்த கல்லூரியில் பணிக்கு சேர்ந்தாலும் சில ஆண்டுகளுக்குள் பணியிட மாறுதல் பெற முயற்சி மேற்கொள்கிறார்கள். இதற்காக கல்லூரி அளவிலும், மண்டல அளவிலும் ஏஜென்ட்டாக சிலர் செயல்படுகிறார்கள்.  ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், வெளியாட்கள் என பாரபட்சம் இல்லாமல் உயர்கல்வித்துறை சார்ந்த பொறுப்புகளில் உள்ளவர்களும் இதற்காக இந்த முறைகேட்டில் வசூல் வேட்டை நடத்துகிறார்கள்.

குறைந்தபட்சம் 2 லட்சம் முதல் குறிப்பிட்ட இடத்துக்கான டிமாண்டை பொறுத்து, காலிப்பணியிடத்தின் விலையை ஏற்றிக்கொண்டே செல்கிறார்கள். கல்லூரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு மிகவும் ரகசியமாக நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படாது. கலந்தாய்வில் பங்கேற்பவர்களுக்கு மட்டுமே அதுதொடர்பாக தகவல் தெரிவிக்கப்படும். கலந்தாய்வு நடப்பதற்கு முன்னதாக பணம் கொடுத்தவரால் தேர்வு செய்யப்பட்ட கல்லூரி இடம் பணியிட மாறுதல் இடங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்படும். டிமாண்ட் இல்லாத காலிப்பணியிடங்கள் மட்டுமே பட்டியலில் காட்டப்படும். காலிப்பணியிடங்களை மறைத்து முறைகேடு செய்வதை கண்டித்து, கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் தரப்பில் போராட்டம் நடத்தியுள்ளோம். தமிழகத்தில் ஆண்டு ஒன்றுக்கு 400 முதல்  500 ஆசிரியர்கள் பணியிட மாறுதலில் செல்கிறார்கள். இதன்மூலம் பல கோடி ரூபாய்  முறைகேடு நடந்துள்ளது.

அதேபோல் அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு என, சீட் ஒதுக்கப்படுகிறது. அதேநேரத்தில், மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பித்தவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். சில சமயங்களில் கூடுதல் எண்ணிக்கை மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு கல்லூரிக்கல்வி இயக்ககம் சார்பில், முன்தேதியிட்டு ஒப்புதல் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக கவர்னர் அலுவலகத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இதற்காக மாணவர்களின் கல்லூரி கட்டணம் போக, சீட்டுக்காக கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை பல்வேறு நிலைகளில் உள்ளவர்களால் பங்கிட்டுக்கொள்ளப்படுகிறது. இவற்றை கட்டுப்படுத்த ஒற்றைசாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர்.

கவர்னர் நடவடிக்கை எப்போது?

ஆசிரியர் தரப்பில் கூறுகையில்: உயர் கல்வித்துறையில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தருக்கும், தமிழக கவர்னருக்கும் புகார் மனுக்களை அனுப்பியுள்ளோம். அவரை நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். ஆனால் இதுவரை கவர்னர் எங்களை சந்திக்க நேரம் கொடுக்கவில்லை. எங்களின் மனுக்களின் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இந்த முறைகேடுகளில் கவர்னர் அலுவலகத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: