நள்ளிரவு வரை அதிமுக கூட்டணி பேச்சு 17 தொகுதிகளை கேட்டு பாஜ பிடிவாதம்: மார்ச் 1ம் தேதிக்குள் முடிக்க கெடு

சென்னை: கூட்டணிக்குள் உள் ஒதுக்கீடாக 17 தொகுதிகளை கேட்டு பாஜ அடம் பிடிப்பதால், அதிமுக-பாஜ தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படாததால் நள்ளிரவு வரை பஞ்சாயத்து நடத்திய மத்திய அமைச்சர் ஏமாற்றுத்துடன் டெல்லி திரும்பினார். அதேநேரத்தில் மார்ச் 1ம் தேதி பிரதமர் மோடி வருவதற்குள் கூட்டணியை முடிவு செய்ய வேண்டும் என்று மிரட்டியதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் தேதி இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதம் துவக்கத்தில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இதனால், தேசிய மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக-பாஜ இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மூத்த அமைச்சர்கள் பாஜவுடன் ரகசிய பேச்சுவார்த்தையை நடத்தி வந்தனர்.

பாஜ அதிக இடங்களை கேட்டது. இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரட்டை இலக்க எண்ணில் சீட் தர முடியாது. ஒற்றை இலக்க எண்ணில் தான் சீட் தர முடியும் என்று அதிமுக உறுதியாக கூறி விட்டது. அதுவும் நாங்கள் தரும் இடத்தில் தான் போட்டியிட வேண்டும். குறிப்பிட்டு தொகுதிகளை கேட்கக்கூடாது என்றது. அதிமுகவின் கண்டிஷனை கேட்டு பாஜ அதிர்ந்து போனது. இதனால் அதிமுக, பாஜ கூட்டணியில் கடும் சிக்கல் உருவானது. இது குறித்து பாஜ மாநில தலைமை கட்சி மேலிடத்துக்கு தகவல் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து கட்சி மேலிடம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய அமைச்சரும், தமிழக மக்களவை தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு 8.40 மணிக்கு சென்னை வந்தார். 8.40 மணி முதல் 9.20 விமான நிலையத்தில் உள்ள விஐபி அறையில் தமிழக தேர்தல் கூட்டணி தொடர்பாக மாநில தலைவர் தமிழிசை மற்றும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், ஆழ்வார்பேட்டையில் உள்ள தொழில் அதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் வீட்டிற்கு சென்றனர். அங்கு அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவில் உள்ள அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோருடன் ேபச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மக்களவை தேர்தலில் பாஜவுக்கு எத்தனை சீட் கொடுப்பது என்பது தொடர்பாக அவர்கள் நள்ளிரவு வரை அதாவது நேற்று அதிகாலை 1 மணி வரை தொகுதி பங்கீடு குறித்து விவாதித்தனர்.இந்த பேச்சுவார்த்தையின்போது, அதிமுக சார்பில் பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்து 32 தொகுதிகள் கேட்கப்பட்டன. இதற்கு பாஜ சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து தங்களுக்கு 17 தொகுதிகளும் வேண்டும் என அடம் பிடித்தது. இந்த பேச்சுவார்த்தையின்போது பேசப்பட்ட தொகுதி பங்கீடு குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதன் விவரம் வருமாறு:அதிமுக-பாஜ கூட்டணி அமைவது உறுதியாகி உள்ளது. அதாவது, அதிமுக-பாமக ஒரு அணியாகவும் பாஜ, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவும், பாஜவும் தங்களது அணிக்காக சீட் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், பாஜ சார்பில் பாஜவுக்கு 10 தொகுதிகள், தேமுதிகவுக்கு 4, மற்ற 3 கட்சிகளும் தலா ஒரு தொகுதி கேட்கப்பட்டது. மேலும், பாமகாவுக்கு 4 இடமும், மீதமுள்ள 19 தொகுதிகளை அதிமுக எடுத்துக்கொள்ளட்டும் என்று பாஜ சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அதிமுக தலைவர்கள், மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜ மற்றும் தேமுதிகவுக்கு-8, பாமக-6, என்.ஆர். காங்கிரஸ்-1 தொகுதிகளையும் கொடுத்து மீதமுள்ள 25 தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுகிறோம். புதிய தமிழகம் தென்காசி தொகுதியில் அதிமுக சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று அதிமுக பிரதிநிதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏனென்றால் தற்போது மக்களவையில் அதிமுக சார்பில் 37 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், பெரும்பாலான தொகுதிகளை பாஜ கேட்கின்றனர். அவ்வாறு கொடுத்தால் அதிமுக செல்வாக்கு சரிந்து போகிவிடும் என்று அதிமுக மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், அதிமுக-பாஜ தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், பாமகவுக்கு என்ன தொகுதி கொடுக்கிறீர்களோ அதே தொகுதிகள்தான் தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தொகுதி பங்கீட்டில் உச்சக்கட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து இன்று சென்னை திரும்பும் விஜய்காந்திடம் பேசி சமரசம் செய்ய பாஜ தலைவர்கள் முயற்சியில் ஈடுபடுவார்கள். ஆனால், பாமகவுக்கு கொடுக்கும் தொகுதிகளை எங்களுக்கு கொடுக்காவிட்டால் நாங்கள் வெளியேறி விடுவோம் என தேமுதிக கூறியுள்ளதாக தெரிகிறது.

இதனால், பாமகவுக்கு கொடுக்கப்படும் சீட்டுகளை குறைத்து வழங்க பேச்சுவார்த்தை நடத்துமாறு அதிமுக தலைவர்களுக்கு பாஜ அசைன்மென்ட் கொடுத்துள்ளது. நள்ளிரவு வரை நீடித்த பேச்சுவார்த்தையில் உறுதியான உடன்பாடு எதுவும் எட்டப்படாததால், பியூஸ் கோயல் அதிகாலை டெல்லி புறப்பட்டு சென்றார். பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், பேச்சுவார்த்தை திருப்தி அளிப்பதாக உள்ளது என்றார். தமிழிசை கூறுகையில், கூட்டணி பேச்சுவார்த்தை நல்ல திசையில் செல்கிறது. விரைவில் நல்ல செய்தி அறிவிப்போம் என்றார். பேச்சுவார்த்தையில் உறுதியான ஒரு முடிவு எட்டப்படாவிட்டாலும், அதிமுக - பாஜ கூட்டணி என்பது தற்போது உறுதியாகி உள்ளது. ஆனாலும், தொகுதி பங்கீட்டில் இழுபறி உள்ளது. இதுவும் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைந்து விடும் என்று கூறப்படுகிறது. அதையடுத்து, மார்ச் 1ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அப்போது அதிமுக - பாஜ கூட்டணியில் எந்தெந்த தொகுதி என்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: