சேலம் ஆவினில் இருந்து திருப்பதி கோயிலுக்கு 85 டன் நெய் சப்ளை

சேலம்: சேலம் ஆவினில் இருந்து திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு 85டன் நெய் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மாதவரம் (சென்னை), வேலூர், மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர் தர்மபுரி, விழுப்புரம், நெல்லை உள்ளிட்ட 19 இடங்களில் ஆவின் எனப்படும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் செயல்பட்டு வருகின்றன. மாநில அளவில், சேலம் ஆவின் நிறுவனம் தினமும் 4.75லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.

சேலத்தில் கொள்முதல் செய்யப்படும் பாலில் 1.50 லட்சம் லிட்டர், தினமும் சென்னையில் உள்ள நுகர்வோர் தேவைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. சேலம், நாமக்கல் மாவட்ட நுகர்வோருக்கு நேரடியாக 1.80 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. எஞ்சியுள்ள பாலில் இருந்து பவுடர், வெண்ணெய், பால் கோவா, குளோப் ஜாமூன், பர்பி உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோடையில் பசுக்களின் கறவைத்திறன் குறைகிறது.

இதனால் ஏற்படும் தட்டுப்பாட்டை சமாளிக்க, சேலம் ஆவின் முன்கூட்டியே பால் பவுடர், வெண்ணெய் ஆகியவற்றை தயாரித்து, இருப்பு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, பவுடர் 600 டன், வெண்ணெய் 600 டன் அளவில் மட்டும் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு, சேலம் ஆவினில் இருந்து 85 டன் நெய் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில், இதுவரை47 டன் நெய் திருப்பதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. மீதியுள்ள 38டன் நெய்யை அனுப்பும் பணி நடந்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: