திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை உடனடியாக நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி : திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தலை உடனடியாக நடத்த கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், தேர்தல் தொடர்பான கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க அறிவுறுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மறைவை தொடர்ந்து திருவாரூர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திருவாரூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. மேலும் தேர்தலுக்கு மனு தாக்கலும் செய்யப்பட்டு வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடத்தொடங்கினர்.  இதையடுத்து கஜா புயல் பாதிப்பு காரணத்தினால் தற்போது தேர்தல் நடத்தும் சூழல் மேற்கண்ட தொகுதியில் கிடையாது எனவும், அதனால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதேப்போல் தலைமை தேர்தல் ஆணையத்திலும் அவர் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து திருவாரூர் இடைத்தேர்தல் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. அதேப்போல் இந்த வழக்கு விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் அதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்துவைத்து உத்தரவிட்டது. இந்நிலையில் கேகே.ரமேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய இரண்டு தொகுதியின் இடைத்தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். இதற்கு தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இந்த மனுவினை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து தேர்தல் தொடர்பான கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க அறிவுறுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: