தீவிரவாதிகளுக்கு ஆதரவு மற்றும் புகலிடம் அளிப்பதை நிறுத்துங்கள்..: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: தீவிரவாதிகளுக்கு ஆதரவு மற்றும் பாதுகாப்பபான புகலிடம் அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று அமெரிக்கா எச்சரி்க்கை விடுத்துள்ளது. ஜம்முவில் செயல்பட்டு வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த(சிஆர்பிஎப்) 2,500 வீரர்கள், ஜம்முவில் இருந்து ஸ்ரீநகரை நோக்கி 78 பேருந்துகளில் நேற்று சென்று கொண்டிருந்தனர். புல்வாமா மாவட்டத்தில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் அவந்திபோரா அருகே வீரர்களின் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன. அப்போது, ஒரு இடத்தில் மறைந்திருந்த தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை திடீரென வேகமாக ஓட்டி வந்து, வீரர்கள் சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்தின் மீது மோதி தாக்குதல் நடத்தினான். உடனே, அந்த வாகனம் பயங்கரமாக வெடித்தது.

Advertising
Advertising

இதில், பேருந்தும் வெடித்து சிதறி சின்னா பின்னமானது. இந்த கொடூர சம்பவம் நடந்ததும், பேருந்தின் முன்னால் சென்று கொண்டிருந்த வீரர்களும், பின்னால் வந்து கொண்டிருந்த வீரர்களும் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள், அவர்களின் மீதும் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதனால் வீரர்கள் நிலை குலைந்தனர். இந்த கொடூர சம்பவத்தில் 40 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் கொடூரமான தீவிரவாத தாக்குதலை ராணுவத்தினர் நேற்று எதிர்கொண்டுள்ளனர். இந்த தீவிரவாத தாக்குதலை பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நடத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளது.

இதற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் சாரா சான்டர்ஸ், ஜம்மு காஷ்மீரில் நடந்திருக்கும் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். மேலும், தாக்குதலை நடத்தியிருப்பது ஐநா சபையால் தீவிரவாத இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு ஆகும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நாம் ஏற்கனவே எடுத்த தீர்மானத்தின்படி, தீவிரவாதிகளுக்கு ஆதரவு மற்றும் பாதுகாப்பபான புகலிடம் அளிப்பதை பாகிஸ்தான் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நாடுகள் நிறுத்திக்கொள்ள வேண்டும். தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: