வேகத்தில் ஸ்டெய்ன் விஸ்வரூபம் இலங்கை 191 ரன்னில் ஆல்-அவுட்

டர்பன்: ஸ்டெய்ன் அபார பந்துவீச்சால், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 191 ரன்களில் சுருண்டது.இலங்கை கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆட உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட முதல் டெஸ்ட்  போட்டி டர்பனில் நேற்று முன்தினம் துவங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் டிமுத் கருணரத்னே பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஆட்டத்தின் 2வது ஓவரிலேயே பெர்னாண்டோ வீசிய பந்தில் டிக்வெல்லாவிடம், கேட்ச் கொடுத்து எல்கர் (0) டக்-அவுட் ஆனார். தொடர்ந்து ஹசிம் ஆம்லா 3 ரன்னில் ஆட்டமிழந்தார். 8 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள்  என்ற பரிதாபமான நிலையில் இருந்து தென்ஆப்ரிக்க அணியை பவுமா - கேப்டன் டுபிளசிஸ் மீட்டனர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்தது. டுபிளசிஸ் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். பவுமா 47 ரன்களில் ரன்-அவுட்  ஆனார்.இதன்பிறகு அதிரடியாக ஆடிய விக்கெட் கீப்பர் குவின்டான் டி காக், 94 பந்துகளில் 80 ரன்கள் குவித்து ரஜிதா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பின்வரிசை வீரர்களில் கேசவ் மகராஜ் 29 ரன்கள் எடுத்து ஆறுதல் அளிக்க, தென்  ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 59.4 ஓவர்களில் 235 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் விஷ்வா பெர்னாண்டோ 4, ரஜிதா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இலங்ைக முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்திருந்தனர். நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இலங்கை அணிக்கு வேகப்பந்து கூட்டணியான  ஸ்டெயின் - பிலாண்டர் அதிர்ச்சி அளித்தனர். ஸ்டெயின் பந்து வீச்சில் ஒசாடா பெர்னாண்டோ 19 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் கருணரத்னே 30 ரன்னில் பிலாண்டர் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். குஷால் மெண்டில் 12  ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய குஷால் பெரேரா 51 ரன்களுக்கு ஸ்டெய்ன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.முதல் இன்னிங்சில் இலங்கை அணி 59.2 ஓவர்களில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென்ஆப்ரிக்க அணி தரப்பில் ஸ்டெயின் 4, பிலாண்டர், ரபாடா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

44 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய தென்ஆப்ரிக்க அணி தேநீர் இடைவேளையின்போது 1 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்திருந்தது. மார்க்ரம் 28 ரன்னில் ரஜிதா பந்தில் ஆட்டமிழந்தார்.

கபிலை முந்தினார்

இப்போட்டியில் நேற்றுமுன்தினம் திரிமன்னே விக்கெட்டை வீழ்த்திய ஸ்டெய்ன், கபில்தேவின் சாதனையை சமன் செய்தார். கபில்தேவ் 131 டெஸ்டில் 434 விக்கெட் கைப்பற்றி அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களில் 8வது இடத்தில்  இருந்தார். ஸ்டெய்ன் 92 டெஸ்டில் 434 விக்கெட் கைப்பற்றி அவரை சமன் செய்தார். இதைத்தொடர்ந்து, நேற்று 3 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராடுடன்  7வது இடத்தை பகிர்ந்துள்ளார். முரளிதரன் 800 விக்கெட்டுடன் முதல் இடத்திலும், ஷேன் வார்ன் (708), கும்ப்ளே (619), ஜேம்ஸ் ஆண்டர்சன் (575), மெக்ராத் (563), வால்ஷ் (516) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: