வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

வாஷிங்டன்: வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. வெனிசுலாவின் வளங்களை திருடி வரும் அதிபர் மதுரோவுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளிக்க கூடாது என்று அமெரிக்கா கூறியுள்ளது. தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் வெனிசுலா நாடும் ஒன்று. இங்கு கடந்த மே மாதம் நடந்த தேர்தலிலும் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபரானார். பல்வேறு முறைகேடுகளை செய்து மதுரோ தேர்தலில் வென்றிருப்பதாகவும் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

இந்நிலையில் அமெரிக்க நாடானது வெனிசுலா மீது புதிய பொருளாதார தடைகளை கடந்த மாதம் விதித்தது. வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெயை பெருமளவில் வாங்கி வந்த அமெரிக்கா, பொருளாதார தடை விதித்ததால் அந்நாடு பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளது. மேலும் இதேபோன்று ஐரோப்பிய நாடுகளும் வெனிசுலா மீது இந்த தடையை விதித்துள்ளன. இதன் காரணமாக கச்சா எண்ணெய் வர்த்தகத்தை சீர்படுத்த வெனிசுலா சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை கூடுதலாக விற்பனை செய்ய வெனிசுலா எண்ணெய் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

அமெரிக்கா தடை விதித்துள்ள போதிலும், ஈரானிடம் இருந்து இந்தியா பண்டமாற்று முறையில் கச்சா எண்ணெய்யை வாங்கி வருகிறது. ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கும் தொகையில் பாதியளவு பொருட்களையும், மீதி ரூபாயிலும் இந்தியா செலுத்தி வருகிறது. இதேபோல கச்சா எண்ணெய்யை இந்தியாவிடம் விற்பனை செய்ய வெனிசுலா அரசு முன் வந்துள்ளது. இதற்காக பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. இத்திட்டத்திற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

வெனிசுலாவின் வளங்களை விற்பனை செய்ய அதிபர் மதுரோ அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறியுள்ளார். அவ்வாறு மதுரோ விற்பனை செய்தால் அது திருட்டு செயலுக்கு ஒப்பானதாகும் என அவர் விமர்சித்துள்ளார். மேலும் திருடுபவர்களுக்கு சரியான தண்டனை பெற்று தருவோம் என்றும் திருடும் நபர்களுடன் கைகோர்க்கும் நாடுகளுக்கும் தக்க பதிலடி காத்திருக்கிறது என்றும் ஜான் போல்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் இந்தியாவில் பெட்ரோல் டீசல், விலை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: