அமெரிக்கா-மெக்ஸிகோ எல்லையில் அறிவித்தபடி நீளமான சுவர் எழுப்பப்படும்: அதிபர் ட்ரம்ப் உறுதி

டெக்சாஸ்: அமெரிக்கா-மெக்ஸிகோ எல்லையில் அறிவித்தபடி நீளமான சுவர் எழுப்பப்படும் என அதிபர் ட்ரம்ப் மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எல்பாசோவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் ட்ரம்ப் எல்லை பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு சரியான இடம் இதைத்தவிர வேறொன்றும் இருக்காது எனவும், சுவர் எழுப்புவது எவ்வளவு முக்கியமானது என்பது இங்குள்ள மக்களுக்கு தான் அதிகம் தெரிந்திருக்கும் என்றும் கூறினார். சுவர் எழுப்புவதால் மிகப்பெரிய வித்தியாசம் ஏற்பட்டுவிடாது என்பவர்களுக்கு இங்குள்ள மக்களே சாட்சியாக இருக்கிறார்கள் என்றும் ட்ரம்ப் பேசினார். எல்லை பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக மீண்டும் அரசு பணிகள் முடக்கம்  ஏற்படுவதை தடுக்கும் வகையில், ஆளும் குடியரசு மற்றும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்.பிக்கள் இடையே சுமூகமான ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பது நல்ல செய்தியாகவே தென்படுகிறது என்றும் அவர் கூறினார். எனினும் இந்த ஒப்பந்தம் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது பிறகு தான் தெரியவரும் என்றும், என்ன நடந்தாலும் எல்லையில் சுவர் எழுப்பும் முடிவில் இருந்து தாம் பின்வாங்க போவதில்லை என்றும் ட்ரம்ப் உறுதிபட தெரிவித்தார்.

முன்னதாக  அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் சுவர் எழுப்புவதற்கு கூடுதலாக நிதி ஒதுக்கவேண்டும் என்ற ட்ரம்பின் கோரிக்கையையும் நிராகரித்தனர். இதனால் அரசு செலவின மசோதாவில் ட்ரம்ப் கையெழுத்திடாததால் அமெரிக்காவில் சுமார் 35 நாட்களாக அரசு பணிகள் முடங்கின. இதனால் அரசு ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதனை தொடர்ந்து, இந்த பிரச்சனைக்கு முடிவு காணும் வகையில் தற்காலிக தீர்வாக செலவின மசோதாவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இந்நிலையில் சுவர் எழுப்புவது தொடர்பாக ட்ரம்ப் விதித்த கெடு விரைவில் முடிவுக்கு வரவுள்ளதால் நாடாளுமன்றத்தில் மீண்டும் எம்.பிக்கள் கூடி விவாதித்தனர். எனினும் இந்த உடன்பாட்டில் சுவர் எழுப்புவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: