மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியத்துடன் சலுகை

மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியத்துடன் சலுகை

Advertising
Advertising

வருவாய்த்துறை சார்பில் மத்திய அரசின் இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்படும். தீபாவளி, பொங்கலுக்கு நபர்க்கு ஒரு இலவசவேட்டி அல்லது சேலை வழங்கப்படும். மதிய உணவுத்திட்டத்தில் பங்கெடுப்போர்க்கு மாதத்திற்கு 2 கிலோ இலவச அரிசி அல்லது மதியஉணவுத்திட்டத்தில் பங்கெடுக்காதவர்களுக்கு மாதத்திற்கு 4 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. நிபந்தனைகள்: 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டிருக்க வேண்டும். முழுவதும் கண் பார்வையற்றவர்களுக்கு வயது வரம்பு இல்லை. ரூ.5 ஆயிரத்திற்கு மேல் சொத்து இல்லாதவராக இருக்க வேண்டும்.

உழைத்து வாழ இயலாதவராக இருக்க வேண்டும். வருமானம் இல்லாதவராக இருக்க வேண்டும். 18வயதிற்கு மேற்பட்ட மகன் அல்லது பேரன் இருந்தாலும் வறுமைக்கோட்டு பட்டியலில் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி என்பதற்கான தேசிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.இணைக்க வேண்டிய ஆவணம்: மனுவுடன் புகைப்படம், குடும்ப அட்டை நகல், வருமானம், இருப்பிடச் சான்று, மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.தொடர்புமுகவரி: சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்), தனி துணை ஆட்சியர் (மக்கள் குறைதீர்வு) கலெக்டர் அலுவலக வளாகம், திண்டுக்கல் என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.

செவித்திறன் குறைந்தோருக்கு தொழிற்பயிற்சியும், வேலைவாய்ப்பும்

பேச்சுத்திறன் மற்றும் காதுகேட்கும் திறன் இழந்தவர்களுக்கு பயிற்சி(ஆண்கள்) அரசு தொழிற்பயிற்சி நிலையம், கிண்டியில் பொருத்துநர் பிரிவில் இலவசமாக இரண்டாண்டுகள் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாத உதவித் தொகையாக ரூ.100வழங்கப்படுகிறது.நிபந்தனைகள்: பேச்சுத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடையோர் 10ம் வகுப்பு தேறியிருக்க வேண்டும். 18வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல் இணைக்க வேண்டும்.

தொடர்பு முகவரி: முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கிண்டி, சென்னை&32 என்ற முகவரிக்கோ திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கோ தொடர்பு கொள்ளலாம். கல்வி நிறுவனங்களில் உள்ள ஆசிரியர் பணியல்லாத பணியிடங்களை செவித்திறன் குறையுடையோர்க்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அரசு மற்றும் நிதிஉதவி பெறும் கல்வி நிறுவனங்களில் மொத்த எண்ணிக்கையில் இரண்டு சதவீத பணியிடங்கள் இதற்காக ஒதுக்கீடு செய்யப்படும். நிபந்தனைகள்: பதவிக்குத் தேவையான கல்வித்தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவேட்டில் இடம் பெற்றிருக்க வேண்டும். தொடர்புமுகவரி: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், கலெக்டர் அலுவலக வளாகம், திண்டுக்கல் என்ற முகவரிக்கு நேரிலோ (0451) 2460099 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட ஊனமுள்ள மாற்றுதிறனாளிக்கு கூடுதல் உதவி

ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் சார்பில் (இந்திய அரசு சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தலுக்கான அமைச்சகம்) ஒன்றும் மேற்பட்ட ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான மறுவாழ்வு அளிக்கப்படுகிறது.இதன்படி அவர்களுக்கான பயிற்சி, மருத்துவம், சேவைகள், மறுவாழ்வு உளவியல், தொழிற்பயிற்சி, பேச்சு, கேட்டல், தொடர்பான பயிற்சி, சிறப்புக்கல்வி, செயற்கை அவயங்கள் மற்றும் முடநீக்கு சாதனங்கள் பொருத்துதல், உதவி உபகரணங்கள், உணர்வு உறுப்புகள் குறைபாட்டிற்கான ஒருங்கிணைப்பு பயிற்சி மற்றும் சமுதாயம் சார்ந்த மறுவாழ்வு பணிகள் அளிக்கப்படுகிறது.

விதிமுறைகள்: ஒன்றுக்கு மேற்பட்ட ஊனங்கள் உள்ள மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.கண் பார்வை யின்மையோடு இணைந்த காது கேளாமை, மூளை முடக்குவாதம், ஆட்டிசம் (புறஉலகச்சிந்தனை இல்லாமை), மனவளர்ச்சி குன்றுதலோடு இணைந்த காதுகேளாமை, காது கேளாமையோடு இணைந்த மூளை முடக்குவாதம் பாதிப்பு உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்.தொடர்புமுகவரி: ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் (இந்திய அரசு சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தலுக்கான அமைச்சகம்), கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடு, கோவளம் அருகில், சென்னை-603 112 என்ற முகவரியிலோ (044) 27472113, 27472046, 27472389 ஆகிய எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: