இறந்த பிறகும் உலகை பார்க்கலாம்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆக.25 முதல் செப்.8ம் தேதி வரை தேசிய கண்தான இருவாரவிழா கொண்டாடப்படுகிறது. பார்வையின்மையை கட்டுப்படுத்தும்விதமாக இது அனுசரிக்கப்பட்டு வருகிறது. கண்பார்வை இழப்பு இந்தியாவில் அதிகம். சுமார் ஒன்றரை கோடி பேர் பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 60 சதவீதம் பேர் 12 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பதுதான் வேதனை.40 லட்சத்திற்கும்மேல் கார்னியா குறைபாட்டினால் பாதிக்கப்பட்டு கருவிழிக்காக ‘காத்துக்கொண்டுள்ளனர்’. ஆனால் கிடைக்கும் கருவிழிகளோ ஆண்டிற்கு 19 ஆயிரம் மட்டும்தான். இதனால் ‘உலகை பார்க்கும் வாய்ப்பு இருந்தும்’ லட்சக்கணக்கானோர் தொடர்ந்து இருளிலே பரிதவித்து வருகின்றனர். பற்றாக்குறை இருப்பதால்தான் ஒரு கண்ணிற்காவது பார்வை கிடைக்கட்டுமே என்ற நோக்கில் ஒருவர்க்கு ஒரு கருவிழி வீதம் பொருத்தப்பட்டு வருகிறது.

கார்னியா பாதித்தால் ஏன் பார்வை தெரிவதில்லை? ஏனென்றால் கார்னியா எனப்படும் விழிவெண்படலம் பாதிக்கப்பட்டால் ஒளிக்கதிர்கள் உள்ளே செல்வது தடுக்கப்பட்டுவிடும். இதனால் விழித்திரையில் பிம்பம் படியாமல் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. தொற்றுநோய் கிருமிகள், விபத்து, ஊட்டச்சத்துகுறைவு, கண்சிகிச்சை குறைபாடு மற்றும் பிறவியிலேயே இப்பிரச்னை ஏற்படலாம். கண்தானத்தைப் பொறுத்தளவில் ஒருவயது நிரம்பிய குழந்தை முதல் எந்தவயதினரும் செய்யலாம். கண்ணாடி அணிந்தவர்களும் கண்ணில் கண்புரை நீக்க அறுவைச் சிகிச்சை(காட்ராக்ட்) செய்தவர்களும்கூட தானம் அளிக்கலாம். எய்ட்ஸ், மஞ்சள்காமாலை, வெறிநாய்க்கடி, பாம்புக்கடி, புற்றுநோய், மூளைக்கட்டி போன்றவற்றால் இறந்தவர்களின் கண்கள் தானமாகப் பெற முடியாது.

இறந்தவர்களின் கண்களை அப்படியே எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தப்படுகிறது என்று பலரும் தவறாக நினைக்கிறார்கள். இது உண்மையல்ல. கண்ணில் உள்ள கார்னியா எனும் கருவிழியை மட்டுமே எடுத்து பார்வையிழந்தவர்களுக்கு பொருத்தப்படுகிறது. கண்தானம் பெற்றபிறகு இமைகளை மூடி தைத்துவிடுவதால் முகம் விகாரமாக தோன்றாது.பதிவுசெய்யாதவர்களிடம் இருந்து கூட கண்கள் தானமாகப் பெறப்படுகிறது. இதற்கு இறந்தவரின் மகன், மகள் ஆகியோரின் ஒப்புதல் இருந்தால் போதுமானது. இறந்து சுமார் 6 மணி நேரத்திற்குள் இவற்றைப் பெற்று 48 மணிநேரத்திற்குள் மற்றவர்களுக்குப் பொருத்திவிட வேண்டும்.

மருத்துவர்குழு வரும்வரை கண்களில் சுத்தமான தண்ணீர்விட்டு இமைகளை மூடிவைக்க வேண்டும். அல்லது சுத்தமான ஈரத்துணியை போட்டு வைக்கலாம். இது கார்னியா குளிர்ச்சியாக இருக்க உதவும். தலையணை வைத்து இறந்தவர்களின் தலையை உயர்த்தி வைக்க வேண்டும். மின்விசிறியை அணைத்து வைக்க வேண்டும். 15 முதல் 20 நிமிடத்திற்குள் கண்கள்தானமாக எடுத்துக்கொள்ளப்படும். தானம் அளிக்க விரும்பும் உறவினர்கள் அருகில் உள்ள அரசுமருத்துவமனை, கண் வங்கிகளுக்குத் தொடர்பு கொண்டு தெரிவித்தால் போதும்.மக்கள்தொகையின் அடிப்படையில் இந்தியாவைவிட இலங்கை பல மடங்கு குறைவு. ஆனால் இந்தியாவிற்கு தேவையான கண்கள் அதிகம் இலங்கையில் இருந்தே பெறப்படுகிறது. காரணம், இலங்கையில் கண்தானம் கட்டாயமாக்கப்பட்டிருப்பதுதான். நம் நாட்டிலும் இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: