தேசியக் கொடியை தரையில் படவிடாமல் தடுத்து தேசப்பற்றை வெளிப்படுத்திய 'தல'தோனி

ஹாமில்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர் ஒருவர் ஓடிச்சென்று தோனியின் காலில் விழுந்ததார். அப்போது அந்த ரசிகர் தான் கையில் வைத்திருந்த தேசியக் கொடியை கீழே வைத்து தோனியின் காலில் விழ முயன்றார். தோனி  உடனே தனது காலடியில் வைக்கப்பட இருந்த தேசியக் கொடியை தாங்கிப் பிடித்துக் கொண்டார். தேசியக்கொடியை கீழே விழாமல் பிடித்து கொண்ட தோனியின் செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நேற்று ஹாமில்டன் நகரில் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டி நடந்தது. இப்போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஸ்டேடியத்திற்கு வந்தனர். குறிப்பாக இந்திய வீரர்களைக் காண இந்திய ரசிகர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். தொடர் முழுவதிலும் தோனி களமிறங்கும்போதெல்லாம் ரசிகர்களின் ஆரவாரமும், விசில் சத்தமும் விண்ணை பிளந்தது. இது தோனி மைதானத்திற்குள் களமிறங்கும் அனைத்து நாடுகளிலும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதேபோல நியூசிலாந்திலும் தோனிக்கு ரசிகர்கள் கூட்டம் குறைவில்லாமல் இருந்தது.

ரசிகர்கள் கூட்டம் அதிகமிருந்ததால் வீரர்களுக்கு பாதுகாப்பு குறித்த எந்தவிதத்திலும் சிக்கல் வரக்கூடாது என்பதற்காக போட்டியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இருப்பினும் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, திடீரென ரசிகர் ஒருவர் பலத்த பாதுகாப்பையும் மீறி கையில் இந்திய தேசியக் கொடியுடன் மைதானத்துக்குள் நுழைந்தார். அவரை பாதுகாவலர்கள் தொடர்ந்து விரட்டி வந்தனர். ஆனால், அந்த ரசிகர், கையில் தேசியக் கொடியுடன் நேராக வந்து, தோனியின் காலில் விழுந்தார். அப்போது, கையில் இருந்த தேசியக் கொடியை தோனியின் காலடியில் வைத்துவிட்டு விழ அந்த ரசிகர் முயற்சித்தார்.

தோனி, அந்த ரசிகரை எழுப்புவதற்குப் பதிலாக, முதலில் தனது காலடியில் வைக்கப்பட இருந்த தேசியக் கொடி தாங்கிப் பிடித்தார். அதன்பின்னர் தான் அந்த ரசிகரை தோனி எழுப்பிவிட்டார். தேசியக் கொடியை தனது கையிலேயே வைத்துக்கொண்டார். ஏற்கனவே ஒரு பேட்டியின் போது நிருபர் ஒருவர் தோனியிடம் நீங்கள் ஏன் மற்ற வீரர்களை போல தேசியக்கொடியை ஹெல்மெட்டில் வைக்கவில்லை என கேட்டார். நிருபரின் கேள்விக்கு பதிலளித்த தோனி நான் கீப்பிங் செய்யும் போது அவ்வப்போது ஹெல்மெட்டை கழற்றி கீழே வைப்பேன். அதனால் தேசிய கொடி அவமதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக என் ஹெல்மெட்டில் கொடியை வைப்பதில்லை என கூலாக பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
நேற்றைய போட்டியின் போது தோனிக்கு தேசியக் கொடி மீது இருக்கும் மரியாதையையும், தேச பக்தியையும், பார்த்த தொலைக்காட்சி வர்ணனணையாளர்களும் அவரை வெகுவாக புகழ்ந்தனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. தாய்நாட்டின் மீது தோனி வைத்திருக்கும் மரியாதையை ரசிகர்கள் புகழ்ந்தும், வெகுவாக பாராட்டியும் வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED நிலத்தடி நீரை விற்பனைக்கு எடுக்க...