சில்லி பாயின்ட்...

* குவாலியரில் நடந்த தேசிய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரின் பைனலில் ரயில்வே விளையாட்டு வாரியம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன்  பஞ்சாப் அணியை வீழ்த்தி கோப்பையை முத்தமிட்டது. அந்த அணி 9வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
* ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விளம்பரத் தூதராக ஆஸி. அணி முன்னாள் நட்சத்திரம் ஷேன் வார்ன் நியமிக்கப்பட்டுள்ளார். 2019 ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான்  ராயல்ஸ் அணி வீரர்கள் ‘பிங்க்’ வண்ண சீருடை அணிந்து விளையாடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
* பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாட ஆஸ்திரேலிய அணி மறுத்துவிட்ட நிலையில், இரு அணிகளும் மோதும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட  தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற உள்ளது.
* தற்போதுள்ள வீரர்களில் உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர் இந்தியாவின் அஷ்வின் தான் என்று இலங்கை அணி முன்னாள் நட்சத்திரம் முத்தையா  முரளிதரன் கூறியுள்ளார்.
* ஸ்மித், வார்னர் இருவரும் அணிக்கு திரும்பும்பட்சத்தில், ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்  கொள்ளும் என்று பயிற்சியாளர் ரிக்கி பான்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
* இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் (4 நாள் ஆட்டம்) டிராவில் முடிந்தது. இங்கிலாந்து லயன்ஸ் 340 மற்றும் 214/5; இந்தியா ஏ 6 விக்கெட்  இழப்புக்கு 540 ரன் டிக்ளேர். 2வது டெஸ்ட் நாளை மறுநாள் தொடங்குகிறது.
* பிக் பாஷ் டி20 தொடரில் மெல்போர்னில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் 94 ரன் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணியை வீழ்த்தியது.  மெல்போர்ன் ஸ்டார்ஸ் 20 ஓவரில் 168/6 (கேப்டன் மேக்ஸ்வெல் 82, ஸ்டாய்னிஸ் 34, ஹேண்ட்ஸ்கோம்ப் 35); சிட்னி சிக்சர்ஸ் 13.4 ஓவரில் 74 ரன்னுக்கு ஆல் அவுட்.
* ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எப்சி அணி இதுவரை 15 லீக் ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 டிரா, 11 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி  இடத்தில் பின்தங்கியுள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு நடந்த போட்டியில் சென்னையின் எப்சி 2-1 என்ற கோல் கணக்கில் முதலிடத்தில் உள்ள  பெங்களூரு எப்சி அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
* புரோ வாலிபால் லீக் தொடரில் நேற்று நடந்த போட்டியில் கோழிக்கோடு ஹீரோஸ் அணி 15-11, 15-11, 15-7, 12-15, 11-15 என்ற செட் கணக்கில் பிளேக் ஹாவ்க்ஸ் ஐதராபாத்  அணியை வீழ்த்தியது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சில்லி பாயின்ட்...