×

தேனியில் இருந்து திருச்செந்தூருக்கு முருக பக்தர்கள் சைக்கிள் பயணம் : வழிநெடுகிலும் மக்கள் வரவேற்பு

செய்துங்கநல்லூர்:  தேனியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள்  27வது ஆண்டாக திருச்செந்தூர் முருகனை தரிசிக்க செய்துங்கநல்லூர் வழியாக சைக்கிளில் பயணித்தனர். வழிநெடுகிலும் கிராம மக்கள் அன்புடன் வரவேற்று அன்னதானம் வழங்கி உபசரித்தனர். தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட  அணைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (60). முருக பக்தரான இவரது தலைமையில் கடந்த 26 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 27ம் ஆண்டாக கடந்த 19ம் தேதி அணைப்பட்டியில் இருந்து புறப்பட்ட 166 பக்தர்கள் முதல் நாள்  வீரவாண்டியிலும், 2ம் நாள் (20ம் தேதி)  பேரையூர் அடுத்த கூகுளபுரத்திலும் தங்கினர்.

3ம் நாள் (21ம் ேததி) நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் அடுத்த திருமலாபுரம் வனப்பேச்சியம்மன் கோயிலில் ஓய்வு எடுத்தனர். பின்னர் அங்கிருந்து நேற்று (22ம் தேதி) அதிகாலை புறப்பட்ட இவர்கள் காலை 11 மணி அளவில் தூத்துக்குடி மாவட்ட எல்லையான செய்துங்கநல்லூரை சைக்கிளில் வந்தடைந்தனர். சற்று இளைப்பாறிய பிறகு திருச்செந்தூர் நோக்கி தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். இதுகுறித்து குருசாமியான முருகேசன் கூறுகையில், ‘‘தற்போது 27ம் ஆண்டாக இந்த ஆன்மிக சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளோம்.

ஆண்டுதோறும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. திருச்செந்தூரை சென்றடையும் நாங்கள் நாளை (இன்று) அதிகாலை விஸ்வரூப தரிசனத்தை முடித்து நாங்கள் பயணித்த சைக்கிள்களை லாரியில் ஏற்றி அனுப்பிவிட்டு தேனிக்கு பஸ்சில் புறப்பட்டு ஊர் திரும்ப உள்ளோம்’’ என்றார். திருச்செந்தூர் முருகனை தரிசிக்க தேனியில் இருந்து சைக்கிள் யாத்திரை மேற்கொண்ட இவர்களுக்கு செல்லும் வழியெல்லாம் கிராம மக்கள் அன்புடன் வரவேற்று அன்னதானம் வழங்கி உபசரித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : devotees ,Murugan ,bicycle tour ,Theni ,Tiruchendur , Theni, Thiruchendur, Murukan devotees, bicycle
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...