×

தமிழகத்தில் முதன் முறையாக பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சி இயந்திரம் : சேலம் புதிய பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டது

சேலம்: தமிழகத்தில், முதன்முறையாக சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சி இயந்திரம் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களை பயன்படுத்துவது குறித்து பல்வேறு விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் தனியார் நிறுவனம் சார்பில் ₹2லட்சத்தில் பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சி இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி கமிஷனர் சதீஷ் நேற்று துவக்கி வைத்தார். இந்த இயந்திரத்திற்குள் 250 மில்லி முதல் 2.25 லிட்டர் வரையிலான காலியான பிளாஸ்டிக் பாட்டிலை போடும் போது, அவை மறுசுழற்சிக்கு ஏற்றவாறு அரைக்கப்பட்டு இயந்திரத்தில் சேகரமாகும்.

மேலும், காலியான பிளாஸ்டிக் பாட்டிலை போட்டவுடன், இயந்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள பட்டன்களை அழுத்தி 5 வகையான சலுகைகளை இலவசமாக பெற முடியும். அதன்படி 5 நிமிடம் இலவசமாக செல்போனை வேகமாக சார்ஜ் செய்யும் வசதி, 5 நிமிடம் இலவசமாக வைபை பெறும் வசதி மற்றும் 250 மில்லி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெறும் வசதி, தானம் (காசு) செய்யும் வசதி, கூப்பன் (ஏவிஆர் நகைக்கடையின் டிஸ்கவுண்ட்) பெறும் வசதிகள் உள்ளது. எனவே, பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பொதுமக்கள் காலியான குடிநீர் பாட்டில்களை தூக்கி எறியாமல் இந்த இயந்திரத்தில் போட்டு மேற்படி வசதிகளை பெற்று பயனடையுமாறும், சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக சேலம் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கமிஷனர் சதீஷ் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : time ,Tamil Nadu ,Salem ,bus station , Plastic, recycling, salam
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக ஜனநாயக கடமையாற்றியது மகிழ்ச்சி