×

ஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக பள்ளிகளை மூடக்கூடாது: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: ஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக பள்ளிகளை மூடக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. போராட்டம் காரணமாக ஆசிரியர்கள் வராமல் மூடப்பட்ட அனைத்து பள்ளிகளையும் கட்டாயம் திறக்கவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.  பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 7 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற ஆசிரியர்கள் போராட்டத்தால் 80 சதவீதம் அரசு பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. விழுப்புரம், கடலூர், திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 1000க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் அவதிக்குள்ளாக்கப்பட்டனர்.

இதையடுத்து, மாணவர்களின் நலன் கருதி அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு, பணிக்குத் திரும்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில், போராட்டம் காரணமாக அரசு பள்ளிகளை மூடக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்கள் பள்ளிகளை திறந்து வைத்து பள்ளி செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் பற்றாக்குறையை சமாளிக்க, ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களை கொண்டு பள்ளிகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Schools ,School Education Department , Jacotto-Geo Struggle, Schools, School of Education, Order
× RELATED தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளி...