×

முசிறி பகுதியில் காவிரி ஆறு, அய்யாற்றில் தொடரும் மணல் திருட்டு

தா.பேட்டை:  முசிறி பகுதியில் காவிரி ஆறு மற்றும் அய்யாற்று பகுதியில் தொடர்ந்து நடக்கும் மணல் திருட்டை தடுக்கும் நடவடிக்கையாக திருச்சி கலெக்டர் அதிரடியாக ஆய்வு நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். முசிறி பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. மணல் திருட்டை தடுப்பதற்காக திருச்சி கலெக்டர் ராஜாமணி அதிரடியாக தொட்டியம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாழைத்தோப்பு நடுவிலும், காவிரி கரையோரத்தில் இயங்கி வந்த திருட்டு மணல் குவாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் காவிரி ஆற்றிற்கு சென்று மணல் ஏற்றி வர வாகனங்கள் செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டது. வாகனங்கள் உள்ளே செல்லாமல் இருக்க பாதைகளின் குறுக்கே பள்ளம் வெட்டப்பட்டது.

அவ்வப்போது கலெக்டர் ஆய்வு மேற்கொண்டதோடு மணல் திருட்டை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதற்காக மணல் கடத்தல் தடுப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழு ரோந்து பணியில் ஈடுபட்டு மணல் திருட்டில் ஈடுபட்டவர்களை பிடித்து வருகிறது. இருப்பினும் முசிறி காவிரி ஆற்றுப் பகுதியில் மணல் திருட்டு தொடர் கதையாகவே உள்ளது. இது குறித்து முசிறியை சேர்ந்த வக்கீல் தமிழ்ச்செல்வன் என்பவர் கூறுகையில், காவிரி ஆற்றில் மணல் திருட்டு குடிசை தொழிலாக மாறிவிட்டது. ஒரு சாக்கு மூட்டை மணல் ரூ.70லிருந்து 125 வரை விற்கப்படுகிறது. கூலித்தொழிலாளர்களை சம்பளத்திற்கு அமர்த்தியும் மணல் திருடப்படுகிறது. மொபட் அல்லது தலைச்சுமையாக மணல் மூட்டைகள் காவிரி ஆற்றிலிருந்து கரைக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் மினிலோடு ஆட்டோக்கள் மூலம் வெளியூருக்கு கொண்டு சென்று மணல் விற்கப்படுகிறது.

இது தவிர அய்யம்பாளையம், பேரூர், சிந்தம்பட்டி, குணசீலம், கொடுந்துறை, திண்ணக்கோணம் உள்ளிட்ட அய்யாறு செல்லும் பகுதிகளில் மணல் திருட்டு தீவிரமாக நடைபெறுகிறது. அய்யாற்றில் பொக்லைன் இயந்திரம் மற்றும் கூலியாட்களுடன் சென்று டிராக்டர் மூலம் மணல் திருடப்படுகிறது. இதனால் அய்யாற்றில் ஆங்காங்கே பெரும் பள்ளம் உருவாகிறது. காவிரி ஆற்று மணல் தட்டுப்பாடு மிகுந்திருப்பதாலும், திருட்டு மணல் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருப்பதால் கட்டிடங்கள் கட்டுவோர் எம் சாண்ட் மணலுடன் அய்யாற்று மணலையும் கலந்து கட்டிடங்களை கட்டுகின்றனர். இதனால் அய்யாற்று மணலுக்கு தற்போது கிராக்கி அதிகரித்துள்ளது.

எனவே திருட்டுத்தனமாக மணல் எடுத்து விற்பனை செய்வோர் அய்யாற்றில் இரவு நேரங்களில் டிராக்டர் மூலம் மணல் திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். சமூக ஆர்வலர்கள் வருவாய்துறையினருக்கு தகவல் தெரிவித்தால் தகவல் கொடுத்தவரின் பெயர் எப்படியோ கசிந்து விடுகிறது.  இதனால் மணல் திருடர்களால் மணல் திருட்டை தடுக்க முற்படும் சமூக ஆர்வலர்கள் மிரட்டப்படுகின்றனர். எனவே காவிரி ஆறு மற்றும் அய்யாற்றில் நடைபெறும் மணல் திருட்டை தடுக்க திருச்சி கலெக்டர் ராஜாமணி இரவு நேரங்களில் மீண்டும் திடீர் ஆய்வு நடத்துவதோடு மணல் திருடர்களோடு அலுவலர்களுக்கு தொடர்பு இருந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cauvery River ,area ,Musirri , Musiri, Cauvery River, Sand
× RELATED வாட்டி வதைக்கும்...