×

மேல் சிகிச்சைக்காக ஜெ.வை வெளிநாட்டிற்கு அழைத்து செல்வது தொடர்பாக நாங்கள் ஆலோசனை செய்தோம்: ஆணையத்தில் தம்பிதுரை பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்து செல்வது தொடர்பாக பேச்சு எழுந்தது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வாக்குமூலம் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நேற்று காலை 10.25 மணிக்கு நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் ஆஜரானார். சுமார் 3 மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது. அப்போது, அவரிடம் ஆணைய வழக்கறிஞர் முகமது ஜபாருல்லா கான் விசாரணை நடத்தினார். அ்போது அவரிடம் 100க்கும் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு தம்பிதுரை விளக்கமளித்தார்.

அதைத்தொடர்ந்து சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தம்பிதுரையிடம் குறுக்கு விசாரணை செய்தார். சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: எங்களது தரப்பில் தம்பிதுரையிடம் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. அப்போது, அவர், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, அவரை பார்க்க  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வந்தனர். அவர்கள் இருந்த வார்டு வந்தபோது நான் வரவேற்றேன். ஜெயலலிதா இருந்த அறை வரை அவர்கள் போனார்கள் என்று கூறினார். ரிச்சர்ட் பீலே அப்போலோவில்தான் எனக்கு அறிமுகம் ஆனார் என்று கூறினார். அப்போது, நான் 29.3.2018ல் ரிச்சர்ட் பீலேவை சந்தித்தீர்களா என்று கேட்டேன். அவர் சிறிது நேரம் யோசித்து ஆமாம் என்று கூறினார். நான் உடனே எதற்காக அவரை பார்த்தீர்கள் என்று கேட்டேன். அப்போது, அவர் எனக்கு உடல்நிலை சரியில்லை. அதனால், அவரை பார்த்தேன். அப்போது அவர் எனக்கு வேறொரு டாக்டரை பரிந்துரை செய்தார் என்று கூறினார்.

ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்து செல்வது தொடர்பாக பேச்சு எழுந்தது. அப்போது நாங்கள் அதுகுறித்து பேசினோம் என்று கூறினார். அப்போது, நான் 19.10.2016 அமைச்சரவை கூடியது குறித்து தெரியுமா என்று கேட்டேன். அதற்கு அவர் எனக்கு தெரியாது என்று கூறினார்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்கள் தினமும் விளக்கினர். அப்போது, என்னுடன், ஓபிஎஸ் இருந்தார். ஜெயலலிதாவை பார்க்க எந்த விஐபிக்கள் வந்தாலும் அந்த வார்டு அறை வாசலில் நான், ஓபிஎஸ் அமர்ந்திருப்போம். சில சமயங்களில் மதுசூதனன் இருப்பார். நாங்கள் ஜெயலலிதாவை பார்க்க வருபவர்களை வணக்கம் சொல்லி வரவேற்போம். அவர்கள் வார்டிற்குள் சென்று ஜெயலலிதாவை பார்த்தார்களா என்பது தெரியாது.

7.10.2016 அன்று ஜெயலலிதாவை டிரக்யோஸ்டமி சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது, நான் சிறிது தூரம் தள்ளி நின்று அவரை பார்த்தேன் என்று கூறினார். இன்று (நேற்று) விசாரணை ஆணையத்தில் ஓபிஎஸ் உடன் முடித்து கொள்ளலாம் என்று ஆணைய வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால், எங்களது தரப்பில் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தோம். நாங்கள் இன்னும் பலரிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுள்ளோம்.  
கொடநாடு விவகாரம் தொடர்பாக புகார் கொடுத்த கிருஷ்ண பகதூர் காவலாளி எங்களை அணுகியுள்ளார். இந்த வழக்கின் தற்போதைய நிலைப்பாடு என்ன, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த கொடநாடு வழக்கில் நாங்கள் இணைய போகிறோம். விரைவில் எங்களது சார்பில் வழக்கு தொடர உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஓபிஎஸ் 29ம் தேதி ஆஜராகிறார்
உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று முதல் 2 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டில் துணை முதல்வர் ஓபிஎஸ் கலந்து கொள்கிறார். எனவே, இன்று விசாரணையில் ஆஜராவதில் ஓபிஎஸ் தரப்பில் விலக்கு கேட்கப்பட்டது. அதன்பேரில், இன்று நடைபெற இருந்த விசாரணையை ஒத்தி வைத்தது. இந்த நிலையில், அவர் வரும் 29ம் தேதி ஆஜராக நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayalalithaa, over treatment, brother
× RELATED விருதுநகர் காங். வேட்பாளர் மாணிக்கம்...